கயத்தாறு: கொரோனா ஊரடங்குக்கு முன்பு துவங்கிய கயத்தாறு சிவன் கோயில் புனரமைப்பு பணிகளை விரைந்து முடித்து கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கயத்தாறு நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது, 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருநீலகண்ட ஈஸ்வரர் ஆலயம். இக்கோயிலுக்கு முத்துகிருஷ்ணேஸ்வரர் கோயில் என்ற மற்றொரு பெயரும் உண்டு. கயத்தாறை தலைநகரமாகக் கொண்டு அரசாண்ட முத்துக்கிருஷ்ண பாண்டியன் என்ற சிற்றரசன், தனது ஆட்சிக்காலத்தில் இவ்வூரின் நடுப்பகுதியில் 5 நிலைகளைக் கொண்ட ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி இக்கோயிலை அமைத்தார்.
இங்கு முத்துகிருஷ்ணேஸ்வரர், திருமலைநாயகி சன்னதிகளும், தட்சணாமூர்த்தி, சுப்பிரமணியர், விநாயகர் உப சன்னதிகளும் உள்ளன. முதன்மை திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பழம்பெருமை வாய்ந்த இக்கோயிலின் பல்வேறு பகுதிகள், குறிப்பாக 5 நிலைகள் கொண்ட ராஜகோபுரம் மற்றும் அதில் உள்ள சிற்பங்கள் மற்றும் சுற்றுச்சுவர் பழுதடைந்த நிலையில் காணப்பட்டது. இதனை சீர் செய்து கோயிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பது சிவனடியார்கள் மற்றும் பக்தர்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வந்தது.
இதையேற்று 5 நிலைகள் கொண்ட ராஜகோபுரங்களை பழுது பார்த்து புதுப்பித்தல் பணிக்கு ரூ.97.50 லட்சம், பிரகார மண்டபம் மற்றும் மடப்பள்ளி மேல்தளம் பழுதுபார்த்தல் பணிக்கு ரூ.17 லட்சம், சன்னதிகள் மற்றும் மண்டபங்கள், கருங்கல் சுவர்கள் பழுதுபார்த்து சீரமைத்தல் பணிக்கு ரூ.7.37 லட்சம், மண்டபங்களில் தற்போது உள்ள கல் தளத்தை சீரமைத்தல் பணிக்கு ரூ.7.40 லட்சம், மதில் சுவர்கள் பழுதுபார்த்தல் பணிக்கு ரூ.2.92 லட்சம், சன்னதிகள் மற்றும் கல் மண்டபங்கள் தண்ணீர் மூலம் சுத்தம் செய்தல் பணிக்கு ரூ.1.90 லட்சம் என மொத்தம் ரூ.1.34 கோடி தமிழக அரசு ஒதுக்கீடு செய்து பணிகள் தொடங்கி நடந்து வந்தது.
இந்நிலையில் கொரானோ ஊரடங்கால் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் ஊரடங்கு விலக்கப்பட்டதும் பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வந்தது. சுண்ணாம்பு, மணல், கடுக்காய், கருப்பட்டி ஆகியவற்றை பயன்படுத்தி பழங்கால பாரம்பரிய முறைப்படி கோபுர பூச்சு பணிகள், ஸ்தபதி மாரியப்பன் தலைமையில் ராமமூர்த்தி மேற்பார்வையில் நடந்து வந்தது.
கடந்த சில மாதங்களாக பணிகள் கிடப்பில் போடப்பட்டு உள்ளதாக பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். திட்டமிடப்பட்ட காலத்தை கடந்தும் பணிகள் முடிவு பெறாமல் இருப்பதாகவும், எனவே கயத்தாறு சிவன் கோயில் புனரமைப்பு பணிகளில் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்தி பணிகளை விரைந்து முடித்து கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
‘‘நிதி ஒதுக்க வேண்டும்
கயத்தாறை சேர்ந்த பாலகணேஷ் கூறியதாவது: பழமை வாய்ந்த கயத்தாறு சிவன் கோயில், பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டது. இங்கு கந்தசஷ்டி திருவிழா, பிரதோஷ வழிபாடு, தேய்பிறை அஷ்டமி தினங்களில் சிறப்பு பூஜைகள், சுற்றுவட்டார ஐயப்ப பக்தர்கள் சார்பில் மார்கழி மண்டல பூஜை சிறப்பாக நடைபெறும். சிதிலமடைந்து காணப்பட்ட கோபுரங்கள், சுற்றுச்சுவர்களை பழுது பார்க்க நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்ற நிலையில், சமீபகாலமாக பணிகள் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.
இதுபற்றி கேட்ட போது நிதி ஒதுக்கீடு வரவில்லை என கூறப்படுகிறது. திமுக அரசு பொறுப்பேற்றது முதல் இந்துசமய அறநிலையத்துறையில் அனைத்து பணிகளும் முடுக்கி விடப்பட்டு பல்வேறு கோயில்களில் திருப்பணிகள் நடந்து வருகின்றன. அதேபோல் கயத்தாறு சிவன் கோயிலிலும் மீதமுள்ள பணிகளை முடித்து கும்பாபிஷேகத்தை விரைந்து நடத்திட வேண்டும் என்பதே அனைத்து பக்தர்களின் விருப்பமாகும், என்றார்.
