×

கவர்னராக பொறுப்பேற்கும் சி.பி.ராதாகிருஷ்ணன் பாஜ கட்சியில் இருந்து ராஜினாமா: ஜார்கண்ட்டின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வேன் என பேட்டி

சென்னை: ஜார்கண்ட் மாநில மக்களின்அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய பாடுபடுவேன் என்று கவர்னராக  பொறுப்பேற்க உள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார். இந்தியாவில் 13 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமனம் செய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிலையில், தமிழக பாஜ மூத்த தலைவர்களில் ஒருவரான சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநில கவர்னராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர், தமிழக பாஜ கட்சியின் அடிப்படை உறுப்பினராக சேர்ந்து, கட்சியில் பல்வேறு உயரிய பொறுப்புகளை வகித்துள்ளார்.

சி.பி.ராதாகிருஷ்ணனின் சொந்த ஊர் திருப்பூர். இவர் பி.பி.ஏ. பட்டதாரி, தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் படித்தார். விவசாய பணியிலும் தீவிரம் ஆர்வம் காட்டினார்.  இவரது மனைவி பெயர் சுமதி. இவருக்கு ஹரி என்ற மகனும், அபிராமி என்ற மகளும் உள்ளனர். பாஜ கொள்கைகளில் தீவிர ஈடுபாடு கொண்டவர். இவர் கோவை நாடாளுமன்ற தொகுதியில் 5 முறை போட்டியிட்டுள்ளார். இதில் 1998 மற்றும் 1999ம் ஆண்டு நடந்த தேர்தல்களில் வெற்றி பெற்றார்.  2016 முதல் 2019 வரை அகில இந்திய கயிறு வாரியத்தின் தலைவராக இருந்தார்.  தற்போது ஜார்கண்ட் மாநில கவர்னராக நியமனம் செய்யப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன், விரைவில் கவர்னராக பொறுப்பேற்க உள்ளார்.

இந்நிலையில், பாஜ தலைமை அலுவலகமான கமலாயத்துக்கு வருகை வந்த  சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜ கட்சியில் தனது அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையில் நேரில் வழங்கினார்.  அதை தொடர்ந்து அண்ணாமலை கூறுகையில், ‘இன்று சி.பி.ராதாகிருஷ்ணன் பாஜ அலுவலகத்திற்கு வந்து அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக கடிதம் அளித்துள்ளார். அவரின் விலகல் கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது’ என்றார்.   

இதையடுத்து, சி.பி.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில், ‘ஜார்க்கண்ட் கவர்னராக வரும் 18ம் தேதி பொறுப்பு ஏற்கிறேன். 1974ல் தொடங்கியது என்னுடைய பொது வாழ்வு. இன்று மகத்தான இளைய தலைமுறையாக பாஜ உள்ளது. அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டியது அவசியம். பழங்குடியின மக்கள் அதிகம் இருக்கும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பணியாற்ற வாய்ப்பு வழங்கியதற்கு மோடி, அமித்ஷா ஆகியோருக்கு நன்றி. தேவையான அத்தனை அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்ய பாடுபடுவேன்’’ என்று கூறினார்.   


Tags : CP ,Radhakrishnan ,Governor ,BJP ,Jharkhand , Governor, CP Radhakrishnan, BJP, Resignation, Jharkhand, Basic Need, Will Fill, Interview
× RELATED சென்னையில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தது ஏன்?: புதிய தகவல்