×

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி பகுதிகளில் பாலங்களின் கீழ் அழகுபடுத்தும் பணிகள் தீவிரம்.!

சென்னை: சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ஆலந்தூர், அடையாறு மற்றும் பெருங்குடி மண்டலத்திற்குட்பட்ட வேளச்சேரி முதல் ஆதம்பாக்கம் வரையிலான எம்.ஆர்.டி.எஸ். பாலங்களின் கீழ் பகுதிகளில் அழகுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சியில் 14 மேம்பாலங்கள் மற்றும் 12 இரயில்வே மேம்பாலங்கள் என 26 முக்கியப் பாலங்கள், 16 வாகனச் சுரங்கப்பாதைகள், 5 பாதசாரிகள் சுரங்கப்பாதைகள், 4 நடைமேம்பாலங்கள் மற்றும் 234 சிறுபாலங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் சட்டமன்ற மானியக் கோரிக்கையின் போது, சென்னை மாநகரை அழகுப்படுத்தும் வகையில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.25 கோடி மதிப்பீட்டில் பெருநகர சென்னை மாநகராட்சியில் மேம்பாலங்களின் கீழ்ப்பகுதியில் செயற்கை நீரூற்று மற்றும் வண்ண விளக்குகள் அமைத்து, பசுமையாக்கி அழகுபடுத்தும் பணி செயல்படுத்தப்படும் என அறிவித்தார்கள்.

அதனடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் சென்னை மாநகரை அழகுப்படுத்தும் வகையில் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை அகற்றி, கண்கவரும் வகையில் வண்ண ஓவியங்கள் வரைதல், பசுமைப் பரப்பை அதிகரிக்கும் வகையில் மரக்கன்றுகள் நடுதல், சாலைகளின் மையத்தடுப்புகளில் செடிகள் நடுதல், மேம்பாலங்களின் கீழ்ப்பகுதியில் அழகுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளுதல் போன்ற  பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் மண்டலத்திற்குட்பட்ட எம்.ஆர்.டி.எஸ். பாலத்தின் கீழ் பகுதியில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.12 இலட்சம் மதிப்பீட்டில் செடிகள் நடுதல், பசுமைப் புல்வெளிகள் அமைத்தல், வண்ண ஓவியங்கள் வரைதல், செயற்கை நீரூற்று அமைத்தல் போன்ற அழகுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அடையாறு மண்டலம், வார்டு-176, வீராங்கல் ஓடை அருகில் எம்.ஆர்.டி.எஸ். பாலத்தின் கீழ் பகுதியில் சிங்கார சென்னை 2.0 மற்றும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.131 இலட்சம் மதிப்பீட்டில் இருபுறங்களிலும் செடிகள் நடுதல், செடிகளுக்கு தானியங்கி முறையில் தண்ணீர் பாய்ச்சுதல், நடைபாதைகளில் விளக்குகள் அமைத்தல், செயற்கை நீரூற்று அமைத்தல், பொதுமக்கள் அமர்வதற்கு இருக்கைகள் அமைத்தல், துருப்பிடிக்காத கைப்பிடிகள் அமைத்தல், நுழைவுவாயிலில் இரும்பு கதவுகள் அமைத்தல், வண்ண ஓவியங்கள் வரைதல் உள்ளிட்ட அழகுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பெருங்குடி மண்டலம், வார்டு-186, வேளச்சேரி உள்வட்டச் சாலை புழுதிவாக்கம் எம்.ஆர்.டி.எஸ். பாலங்களின் கீழ் பகுதியில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.41.25 இலட்சம் மதிப்பீட்டில் செயற்கை நீரூற்று, பசுமை புல்வெளி, செடிகள் நடுதல், நடைபாதை அமைத்தல், மின்விளக்கு வசதி  உள்ளிட்ட அழகுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இப்பணிகள் அனைத்தும் மார்ச் மாத இறுதிக்குள் முடிக்கப்படும்.

Tags : Alandur ,Adyadaru ,Gurangudi , Under Singara Chennai 2.0 project, beautification works under bridges in Alandur, Adyar, Perungudi areas are in full swing.
× RELATED தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி...