கேப்டவுன்: மகளிர் உலக கோப்பை தொடரில் இன்று மாலை 6.30 மணிக்கு கேப்டவுனில் நடக்கும் 9வது லீக் போட்டியில் குரூப் 2 பிரிவில் இந்தியா -வெஸ்ட்இண்டீஸ் மோதுகின்றன. முதல் போட்டியில் பாகிஸ்தானை வென்ற இந்தியா,வெற்றியை தொடரும் முனைப்பில் உள்ளது. துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா காயத்தில் இருந்து மீண்டதால் இன்று களம் இறங்குகிறார். வெஸ்ட்இண்டீஸ் முதல் போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வி கண்ட நிலையில் இன்று கட்டாய வெற்றி நெருக்கடியில் உள்ளது.
இரு அணிகளும் இதுவரை டி.20 போட்டிகளில் 20 முறை மோதி உள்ளன. இதில் 12ல் இந்தியா, 8ல் வெஸ்ட்இண்டீஸ் வென்றுள்ளன. டி.20 உலக கோப்பையில் மோதி உள்ள 2 போட்டிகளில் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன. இரவு 10.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு போட்டியில் இதே பிரிவில் பாகிஸ்தான்-அயர்லாந்து மோதுகின்றன. முதல் போட்டியில் பாகிஸ்தான் இந்தியாவிடமும், அயர்லாந்து இங்கிலாந்திடமும் தோல்வி அடைந்த நிலையில் முதல் வெற்றிக்காக இன்று மல்லுக்கட்டும்.
