நாகப்பட்டினம் அருகே கடலில் கரை ஒதுங்கிய சீன உருளை சிலிண்டர்: போலீசார் தீவிர விசாரணை

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் கடற்கரையில் ஒதுங்கிய உருளை வடிவிலான சிலிண்டரை கடலோர காவல் குழும போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாகப்பட்டினம் நம்பியார்நகர் கடற்கரையில் மர்மமான முறையில் சிலிண்டர் கரை ஒதுங்கி இருப்பதாக அதே பகுதியை சேர்ந்த நீலகண்டன் என்பவர் நாகப்பட்டினம் கடலோர காவல் குழும போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தார்.

இதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையிலான கடலோர காவல் குழும போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். இந்த சோதனையின் போது 3 அடி உயரம், 2 அடி சுற்றளவு, 30 கிலோ எடை கொண்ட காஸ் சிலிண்டர் இருந்தது. அதில் dong yong quan என்ற வாசகம் ஆங்கில மொழியிலும், சீன மொழியில் சில வாசகங்களும் பொறிக்கப்பட்டு இருந்தது. உருளையின் கீழ் பகுதியில் 400 999 7871 என்ற எண்களும் இருந்தது தெரிய வந்தது.

இதைதொடர்ந்து அங்கிருந்த மீனவர்களிடம் சிலிண்டர் உருளை கரை ஒதுங்கி எவ்வளவு நேரமாகிறது, எந்த திசையில் இருந்து வந்து கரை ஒதுங்கியது என்று விசாரித்தனர். இதனையடுத்து அந்த சிலிண்டர் உருளையை நாகப்பட்டினம் கடலோர காவல் குழும போலீசார் கைப்பற்றி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாகப்பட்டினம் கடல்பகுதியில் சீனா நாட்டை சேர்ந்த சிலிண்டர் உருளை கரை ஒதுங்கிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: