இலங்கைக்கு கஞ்சா கடத்தல் அதிமுக நிர்வாகி கைது
நாகப்பட்டினம்: ஒடிசா மாநிலத்தில் இருந்து நாகப்பட்டினம் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற வழக்கில் வேதாரண்யத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். நாகப்பட்டினம் வழியாக இலங்கைக்கு காரில் கஞ்சா கடத்தப்படுவதாக மாவட்ட எஸ்பி ஹர்ஷ்சிங்க்கு கடந்த 4ம் தேதி அதிகாலை தகவல் வந்தது. இதையடுத்து எஸ்பி உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரை சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். வேளாங்கண்ணி அருகே மேலப்பிடாகை என்ற இடத்தில் மூன்று கார்கள் அடுத்தடுத்து வேகமாக வந்தது. அவற்றை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது காரின் பின்பகுதியில் கஞ்சா பொட்டலங்கள் அடுக்கி இருப்பது தெரியவந்தது. காரில் இருந்த திருப்பூர் மாவட்டம் இடுவை பகுதியை சேர்ந்த மணிராஜ்(36), புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடி கௌதமன்(36), விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் தெட்சிணாமூர்த்தி(41), சிவமூர்த்தி(38) ஆகியோரை கைது செய்து, பல கோடி ரூபாய் மதிப்பிலான 200 கிலோ கஞ்சா மற்றும் 3 கார்களை கைப்பற்றினர். இவர்கள் படகு மூலம் இலங்கைக்கு கடத்த இருந்தது தெரியவந்தது. கீழையூர் போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் அதிமுகவை சேர்ந்த வேதாரண்யம் ஒன்றிய குழு துணைத் தலைவர் அறிவழகனுக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அறிவழகனை போலீசார் நேற்று கைது செய்தனர். இவர் இது போல் பல்வேறு கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டிருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
* கஞ்சா, போதை மாத்திரையுடன் சென்னை ஐடி ஊழியர்கள் கைது
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் சுற்றுலாப்பயணிகளை குறிவைத்து கஞ்சா விற்பனை நடப்பதாகவும், இப்பகுதியில் முறையாக அனுமதி பெறாமல் தங்கும் விடுதிகள் இருப்பதாகவும் தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று ஆர்டிஓ சிவராமன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் அப்பகுதியில் திடீர் சோதனை செய்தனர். அப்போது வட்டக்கானலை சேர்ந்த பாலா என்பவரது அனுமதியற்ற விடுதியில் தங்கியிருந்த பெங்களூரு, சென்னையை சேர்ந்த ஐடி ஊழியர்கள் கஞ்சா, போதை மாத்திரைகள் பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து அங்கு தங்கியிருந்த 24 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து கஞ்சா, போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து ஆர்டிஓ உத்தரவுப்படி அனுமதியற்ற 3 விடுதிகள் மற்றும் கஞ்சா விற்ற ஒரு கடைக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் விடுதி உரிமையாளர்கள் பாலா உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
The post இலங்கைக்கு கஞ்சா கடத்தல் அதிமுக நிர்வாகி கைது appeared first on Dinakaran.