×

ஆளுநர்கள் அரசியல் பேசக்கூடாது: சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: ஆளுநர் பதவிக்கு வந்துவிட்டால், அரசியலில் நாட்டம் கொள்ளாமல், முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவது சிறந்தது என சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார். ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட பாஜ மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், கோவையில் இருந்து விமானம் மூலம் நேற்று மதியம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவரை பாஜவினர் வரவேற்றனர். அப்போது, விமான நிலையத்தில் சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்துக்கு புதிய வரலாற்று சிறப்பை குடியரசு தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர் தந்துள்ளனர். ஒரே மாநிலத்தை சேர்ந்த 3 பேர் ஆளுநராக இருப்பது தமிழகத்தில் இதுவே முதன்முறை. இந்த வரலாறு ஒட்டுமொத்த தமிழகத்துக்கு கிடைத்த பெருமையாகவே கருதுகிறோம். தனிப்பட்ட மனிதருக்கு கிடைத்த பெருமையோ அங்கீகாரமோ அல்ல. கடுமையான உழைப்பு, வெற்றியே பாராமல் உழைத்தால்கூட உரிய அங்கீகாரம் தருவதற்கு, மோடி தயங்கமாட்டார் என்பதை நிரூபித்து உள்ளது.

தமிழகத்தின் மீதும் தமிழ் இனத்தின் மீதும் தமிழ் கலாசார, பண்பாட்டு, இலக்கியம் ஆகியவற்றின் மீதும் குடியரசு தலைவர், பிரதமர் ஆகியோருக்கு உள்ள பிடிப்பாக அமைந்து உள்ளது. ஓரிரு நாளில் பதவி ஏற்பு தேதி முடிவாகும். ஜார்க்கண்ட் மாநிலத்தை பொறுத்தவரை அதிகமாக பழங்குடி, தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்கின்றனர். அவர்கள் சமுதாய அடித்தட்டில் இருப்பவர்கள். அவர்களின் மேன்மைக்கு உழைப்பது தான் தமிழகத்துக்கு பெருமையாக இருக்கும். ஜார்க்கண்டிற்கும் தமிழகத்துக்கும் புதியபாலத்தை உறவை உருவாக்குவோம்.

இதன் மூலம் 2 மாநில வளர்ச்சிக்கு சூழலை உருவாக்க திட்டங்கள் செய்யப்படும். ஆளுநர் அரசியல் குறித்து அதிகம் பேசாமல் இருப்பது நல்லது என நினைக்கிறேன். வக்கீலாக இருக்கும் போது, கட்சிக்காரருக்காக வாதாடுவது நியாயம். நீதிபதியாக வந்து விட்டால் நீதியை மட்டுமே தர வேண்டும். அரசியலில் இருந்து, பரிமாண வளர்ச்சியாக ஆளுநர் பதவிக்கு வந்துவிட்டால், அரசியலில் நாட்டம் கொள்ளாமல், முன்னேற்றத்தில் கவனம் கொள்வதுதான் சிறந்தது.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Governors ,CP ,Radhakrishnan , Governors should not talk politics: CP Radhakrishnan interview
× RELATED கோடைகாலத்தில் தடையில்லாமல் குடிநீர்...