×

தாய்லாந்தில் பயிற்சி பெற்ற யானை பாகன், உதவியாளர்களுக்கு பாராட்டு: அமைச்சர் மதிவேந்தன் பரிசு வழங்கினார்

சென்னை: தாய்லாந்து  நாட்டிற்கு சென்று சிறப்பு பயிற்சி பெற்ற யானை பாகன் மற்றும் உதவியாளர்களை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பாராட்டி பரிசுகள் வழங்கினார். வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வளாகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் தாய்லாந்து யானைகள் காப்பக மையத்தில், யானைகள் வளர்ப்பு மற்றும் காப்பக பராமரிப்பு பணிகள் குறித்து சிறப்பு பயிற்சி முடித்து திரும்பிய 13 யானை பாகன்கள் மற்றும் உதவியாளர்களுக்கு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பாராட்டி பரிசுகள் வழங்கினார்.

பயிற்சி பெற்று திரும்பிய பணியாளர்களை பாராட்டி அமைச்சர் மதிவேந்தன் பேசியதாவது: யானை பாகன் மற்றும் அவரது உதவியாளர் காவடி ஆகியோருக்கு தாய்லாந்து நாட்டில் லாம்பாங்கில் உள்ள தாய்லாந்து யானைகள் காப்பகம் மையத்தில் 7 யானை பாகன்கள், 6 காவடிகள் ஆக மொத்தம் 13 பேர் ரூ.50 லட்சம் அரசு செலவில் 6 நாட்கள் பயிற்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் பயிற்சியை முடித்து திரும்பியுள்ளனர். இவர்களுக்கு யானைகளை அறிவியல் ரீதியாக எவ்வாறு கையாள்வது, அதற்கு பயிற்சி அளிப்பது, எவ்வாறு குளிக்க வைப்பது, யானைகளுக்கான சத்தான உணவுகளை தயாரிப்பது, நோயுற்ற யானைகளுக்கு எவ்வாறு சிகிச்சை அளிப்பது, மதம் பிடித்த யானைகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது, குட்டி யானைகளை பாதுகாப்பது போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டது.

இவ்வாறு அவர் பேசினார். இதை தொடர்ந்து அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பணியாற்றும் களப்பணியாளர்களுக்கு அமைச்சர் மதிவேந்தன் சீருடைகள் வழங்கினார். நிகழ்ச்சியில் செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூ, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் சீனிவாஸ் ரா ரெட்டி, முதுமலை புலிகள் காப்பக இயக்குநர் வெங்கடேசன், சென்னை வனஉயிரின காப்பாளர் பிரசாந்த், முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் அருண்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Thailand ,Minister ,Mathiventhan , Appreciation for helpers and elephant trained in Thailand: Minister Mathiventhan presented the prize
× RELATED தாய்லாந்தில் தண்ணீர்...