*1 குவிண்டால் ரூ.4ஆயிரத்திற்கு விற்பனை
சின்னாளபட்டி : ஆதத்தூர் ஒன்றியத்தில் பயிரிடப்பட்டிருந்த இரும்பு சோளம் எனப்படும் சிவப்புச் சோளப்பயிர் அறுவடை பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது
திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக மக்காச்சோளப்பயிரும், ஒருசில கிராமங்களில் வெள்ளைச்சோளம் மற்றும் சிவப்புச்சோளம் எனப்படும் இரும்பு சோளப்பயிர்களை விவசாயிகள் பயிரிட்டி வருகின்றனர். 30 வருடங்களுக்கு முன்பு கிராமப்புற விவசாயிகள் இரும்பு சோளப்பயிரை உணவாக பயன்படுத்தி வந்தனர்.
அவற்றின் தவிட்டை மாடுகளுக்கு தீவணமாகவும் கொடுத்து வந்தனர். அதன்பின்பு சோளம் பயிரிடுவது அபூர்வமாகிவிட்டது. தற்போது கடந்த 4, 5 வருடங்களாக கிராமங்களில் விவசாயிகள் இரும்பு சோளப்பயிர்களை பயிரிட ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் தற்போது இயற்கை உணவில் மக்கள் ஆர்வம் காட்டி வருவதால் இரும்பு சோளப்பயிர்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.
சோளம் அரிசியைப் விட பல மடங்கு சத்துக்களை கொண்ட ஒரு உணவுப் பொருளா உள்ளதாலும், சோளத்தில் உடலுக்கு தேவையான புரதச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், கொழுப்புச்சத்து, நார்சத்து, மாவுச்சத்து, பி-கரோட்டின், தயமின், ரிபோப்ளோவின், நயசின், மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, அஸ்கார்பிக் அமிலம் ஆகியவை அடங்கியிருப்பதால் இரும்பு சோளப்பயிர்களுக்கு தற்போது கிராக்கி ஏற்பட்டுள்ளது. சர்க்கரை நோய் இருப்பவர்கள் தினமும் சோளத்தை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நல்ல பலனை பெறலாம்.
இதில் இருக்கும் கார்போஹைட்டிரேட் இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்து விடாமல் பாதுகாக்கின்றது. இதனால் உடல் எடை குறைந்து சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க உதவுவதால் இயற்கை உணவை விரும்புபவர்கள் ஒரு நேரமாவது சோளத்தை உணவாக பயன்படுத்தி வருகின்றனர். தற்போது ஆத்தூர் ஒன்றியத்தில் பாளையங்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பிரவான்பட்டி, கூலம்பட்டி மற்றும் அருகே உள்ள சேடபட்டி பகுதியில் பயிரிடப்பட்டிருந்த இரும்புச்சோளப்பயிர்களை அறுவடை செய்து அவற்றை தார்சாலைகளில் உலர்த்தி வருகின்றனர். மார்க்கெட்டில் ஒரு குவிண்டால் இரும்புச்சோளம் ரூ.4ஆயிரத்திற்கு விற்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
