×

எஸ்ஏ20 தொடர் சீசன் 1 சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் சாம்பியன்: பைனலில் பிரிடோரியா கேப்பிடல்சை வீழ்த்தி அசத்தல்

ஜோகன்னஸ்பர்க்: தென் ஆப்ரிக்காவில் நடந்த முதலாவது எஸ்ஏ20 தொடரில், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. பரபரப்பான இறுதிப் போட்டியில் பிரிடோரியா கேப்பிடல்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய சன்ரைசர்ஸ் கோப்பையை கைப்பற்றியது. இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் டி20 தொடருக்கு கிடைத்த வரவேற்புக்குப் பிறகு உலகம் முழுவதும் உள்நாட்டு டி20 தொடர்கள் நடத்துவது அதிகரித்து வருகிறது. ஆஸ்திரேலியாவின் பிக்பாஷ் லீக் முதல்... வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, இங்கிலாந்து, அமீரகம் என பல்வேறு நாடுகளில் டி20 தொடர்கள் நடைபெறுகின்றன.

அதன் தொடர்ச்சியாக தென் ஆப்ரிக்காவில் ‘எஸ்ஏ20’ என்ற பெயரில் புதிதாக உள்ளூர் டி20 தொடர் இந்த ஆண்டு அறிமுகமானது. இத்தொடரில் டர்பன் சூப்பர் ஜயன்ட்ஸ், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ், எம்ஐ கேப் டவுன், பார்ல் ராயல்ஸ், பிரிடோரியா கேப்பிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் என 6 அணிகள் களமிறங்கின. லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடித்த பிரிடோரியா கேப்பிடல்ஸ், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப், பார்ல் ராயல்ஸ் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. முதல் அரையிறுதியில் பிரிடோரியா அணி 29 ரன் வித்தியாசத்தில் பார்ல் ராயல்ஸ் அணியை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது. 2வது அரையிறுதியில் ஜோபர்க் சூப்பர் கிங்சை எதிர்கொண்ட சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் 14 ரன் வித்தியாசத்தில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்த நிலையில், சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்கான பைனலில் பிரிடோரியா - சன்ரைசர்ஸ் அணிகள் நேற்று மோதின. சனிக்கிழமையன்று நடைபெற இருந்த இப்போட்டி, கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டு நேற்று நடந்தது குறிப்பிடத்தக்கது. ஜோகன்னஸ்பர்க், தி வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற பரபரப்பான பைனலில், டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி கேப்டன் எய்டன் மார்க்ரம் முதலில் பந்துவீச முடிவு செய்தார். பில் சால்ட், குசால் மெண்டிஸ் இருவரும் பிரிடோரியா இன்னிங்சை தொடங்கினர்.

சன்ரைசர்ஸ் வீரர்களின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய பிரிடோரியா கேப்பிடல்ஸ் 19.3 ஓவரில் 135 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. தொடக்க வீரர் குசால் மெண்டிஸ் அதிகபட்சமாக 21 ரன் எடுத்தார். ரைலி ரூஸோ, ஜேம்ஸ் நீஷம் தலா 19 ரன், கோலின் இங்ராம் 17, போஷ் 15 தியூனிஸ் 11 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர். சன்ரைசர்ஸ் பந்துவீச்சில் ரோலப் வான் டெர் மெர்வ் 4 ஓவரில் 31 ரன் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். சிசந்தா மெகலா, பார்ட்மேன் தலா 2, மார்கோ ஜான்சென், மார்க்ரம் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 136 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் களமிறங்கியது. ஆடம் ரோஸிங்டன், தெம்பா பவுமா இருவரும் துரத்தலை தொடங்கினர். பவுமா 2 ரன் மட்டுமே எடுத்து போஷ் பந்துவீச்சில் கிளீன்போல்டாக, சன்ரைசர்சுக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. எனினும், ரோஸிங்டன் - ஜார்டன் ஹெர்மான் இணை 2வது விக்கெட்டுக்கு அதிரடியாக 32 பந்தில் 67 ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தது. ஹெர்மான் 22 ரன் (17 பந்து, 5 பவுண்டரி) எடுத்து வெளியேற, ரோஸிங்டன் 57 ரன் (30 பந்து, 4 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினார்.

சன்ரைசர்ஸ் வெற்றியை நெருங்கிய நிலையில்... கேப்டன் மார்க்ரம் 26 ரன் (19 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்), ஜார்டன் காக்ஸ் 7, டிரைஸ்டன் ஸ்டப்ஸ் 5 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழக்க, ஆட்டம் விறுவிறுப்பானது. பிரிடோரியா அணி கடும் நெருக்கடி கொடுத்த நிலையிலும், நீஷம் வீசிய 17வது ஓவரின் முதல் பந்தை  பவுண்டரிக்கு அனுப்பிய மார்கோ ஜான்சென், அடுத்த பந்தை இமாலய சிக்சராகத் தூக்கி வெற்றியை வசப்படுத்தினார். சன்ரைசர்ஸ் அணி 16.2 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 137 ரன் எடுத்து வென்று எஸ்ஏ20 தொடரின் முதலாவது சாம்பியனாகி அசத்தியது. மார்கோ 13 ரன் (11 பந்து), கார்ஸ் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.


Tags : SA20 Series ,Sunrisers ,Eastern ,Cape ,Pretoria Capitals , SA20 Series Season 1 Sunrisers Eastern Cape Champions: Amazing win over Pretoria Capitals in final
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்; இறுதிப் போட்டிக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்!