×

டி20 உலக கோப்பையில் அசத்தல்; நியூசிலாந்தை 75 ரன்னில் சுருட்டி வீசி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி

கயனா: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 14வது லீக் போட்டி வெஸ்ட் இண்டீஸ் கயனாவில் உள்ள பிரோவிடன்ஸ் மைதானத்தில் இன்று அதிகாலை 5 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசியது. இதையடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் ரஹமதுல்லா குர்பாஸ்-இப்ராஹிம் ஜத்ரன் அபாரமாக ஆடினர். குறிப்பாக குர்பாஸ் சிக்சர் மழை பொழிந்தார். அவர் 56 பந்தில் 5 பவுண்டரி, 5 சிக்சருடன் 80 ரன்கள் விளாசினார். இப்ராஹிம் ஜத்ரன் 41 பந்தில் 44 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 14.3 ஓவரில் 103 ரன்கள் குவித்து நல்ல அடித்தளம் அமைத்தது. அதன்பின் வந்த ஓமர்ஸாயை (13 பந்தில் 22 ரன்) தவிர வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இதனால் ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் குவித்தது. பின்னர் 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களம் இறங்கியது. துவக்க ஆட்டக்காரர் பின் ஆலன் பரூக்கி வீசிய முதல் பந்திலேயே ஆட்டம் இழந்தார். அதன்பின் ஆப்கானிஸ்தான் அணியின் பரூக்கி, ரஷித்கான் ஆகியோரின் பந்துவீச்சில் நியூசிலாந்து விக்கெட்டுகள் சீட்டு கட்டுபோல் சரிந்தது. கான்வே 8 ரன்னிலும், கேன் வில்லியம்சன் 9 ரன்னிலும், டேரில் மிட்செல் 5 ரன்னிலும், பிளிப்ஸ் 18 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் நியூசிலாந்து அணி 15.2 ஓவரில் 75 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் 84 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பரூக்கி, ரஷித் கான் தலா 4 விக்கெட்டுகள் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் மேற்கு வெஸ்ட் இண்டீஸ், உகாண்டா, நியூசிலாந்து, பப்புவா நியூ கினியா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ள ‘குரூப் சி’யில் ஆப்கானிஸ்தான் 2 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

 

The post டி20 உலக கோப்பையில் அசத்தல்; நியூசிலாந்தை 75 ரன்னில் சுருட்டி வீசி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி appeared first on Dinakaran.

Tags : T20 World Cup ,Afghanistan ,Zealand ,Guyana ,West Indies ,Providence Stadium ,New Zealand ,Dinakaran ,
× RELATED டி20 உலகக்கோப்பை: ஆப்கானிஸ்தான்...