பாஜவினருக்கே பதவி ஆளுநர்கள் நியமனம் என்பது அரசியல் நியமனமாக உள்ளது: டி.ராஜா குற்றச்சாட்டு

கோவை: ‘பாஜவை சேர்ந்தவர்கள் மட்டுமே ஆளுநர்களாக தொடர்ந்து நியமிக்கப்படுகின்றனர்’ என்று டி.ராஜா குற்றம் சாட்டியுள்ளார். கோவை ஜீவா இல்லத்தில் இந்திய கம்யூனிஸ்ட்  தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா நேற்று அளித்த பேட்டி: அதானி ஊழல் மக்களிடம் பேசு பொருளாக மாறி உள்ளது. இதற்கு பிரதமர், நிதி அமைச்சர் தான் பொறுப்பு. எல்ஐசி மற்றும் எஸ்பிஐயில் பெருமளவு நிதி பெற்று மோசடி செய்துள்ளது மக்கள் பணம். கடந்த காலங்களில் ஊழல் பெரிதளவில் பேசப்பட்டபோது நிதி அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். தற்போது மவுனம் காக்கின்றனர். ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் பாஜ அரசை அகற்ற வேண்டும். ஆளுநர்கள் நியமனம் என்பது அரசியல் நியமனமாக மாறியுள்ளது. பாஜவை சேர்ந்தவர்கள் மட்டுமே ஆளுநர்களாக தொடர்ந்து நியமிக்கப்படுகின்றனர். பாஜ. நியமிக்கும் ஆளுநர்கள் ஒன்றிய அரசின் பிரதிநிதிகளாக செயல்பட்டு வருகின்றனர். எடப்பாடி பழனிசாமிக்கு திமுக அரசையும், இடதுசாரி கட்சிகளையும் குறை சொல்ல எந்த தகுதியும் இல்லை. அவர் ஒரு கட்சியில் அடிமையாக இருந்து வந்தவர்.

* பேனா நினைவு சின்னம் சர்ச்சை தேவையற்றது

டி.ராஜா அளித்த பேட்டியில், ‘கலைஞருக்கு பேனா நினைவு சின்னம் பற்றிய சர்ச்சை தேவையற்றது. ரூ.3 ஆயிரம் கோடிக்கு வல்லபாய் படேலுக்கு சிலை வைத்ததற்கு விவாதம் எழுப்பாதவர்கள், பேனா சிலைக்கு பிரச்னை எழுப்பி  வருகின்றனர். கலைஞர் தனது எழுத்தாற்றல் மூலம் பல புரட்சிகரமான கருத்துக்களை வெளியிட்டவர்’ என்றார்.

Related Stories: