×

எஸ்எஸ்எல்சி விடைத்தாள் மறுமதிப்பீட்டை மறுக்கும் அரசாணையை எதிர்த்து வழக்கு

சென்னை: பத்தாம் வகுப்பு பொது தேர்வு விடைத்தாளை மறுமதிப்பீடு செய்ய முடியாது என்று பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தேர்வுத்துறை இயக்குனர் பதில் தருமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாகை மாவட்டம், நடுகாடு கிராமத்தை சேர்ந்த உமாராணி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில்  தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘எனது மகள் ஒளிர்மதி நன்றாக படிப்பவர். கடந்த 2022 ஏப்ரல் மாதம் நடந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினார். அனைத்து பாடத்திலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுப்பாள் என்று எதிர்பார்த்தோம். ஆனால், கணித பாடத்தில் மட்டும் நூற்றுக்கு நூறு எடுத்திருந்தார். சமூக அறிவியல் பாடத்தில் 86 மதிப்பெண் மட்டுமே பெற்றிருந்தார்.

 இதையடுத்து பள்ளித்தேர்வுத்துறை இயக்குனர் வெளியிட்ட விடைக்குறிப்புகளுடன் ஒப்பிட்டு பார்த்தபோது அவர் அனைத்து கேள்விகளுக்கும் சரியான விடை எழுதியது உறுதியானது. இதையடுத்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அவரது விடைத்தாள் நகலை பெற்று சரி பார்த்தபோது, அந்த விடைத்தாளை திருத்திய ஆசிரியர் சரியாக மதிப்பெண் வழங்காதது தெரியவந்தது. எனவே, விடைத்தாளை மறுமதிப்பீடு செய்ய கோரி மனு கொடுத்தேன். இதற்கு பதில் அளித்த தேர்வுத்துறை இயக்குனர், கல்வித்துறை கடந்த 1982ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையின்படி மறுக்கூட்டலுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

மறு மதிப்பீடு செய்ய விண்ணப்பிக்க முடியாது என்று கூறி மனுவை நிராகரித்து உத்தரவிட்டார். இதன் மூலம் எனது மகளின் உயர் கல்வியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, மறு மதிப்பீடு செய்ய மறுத்த இயக்குனரின் உத்தரவையும், அரசாணையையும் ரத்து செய்ய வேண்டும்\\” என்று கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், இந்த மனுவுக்கு 3 வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி தேர்வுத்துறை இயக்குனர், பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டார்.

Tags : SSLC , Case against order denying revaluation of SSLC answer sheet
× RELATED நெல்லையில் கட்டுக்கடங்காத கூட்டம்;...