கேப்டவுன்: 10 அணிகள் பங்கேற்றுள்ள 8வது ஐசிசி மகளிர் டி.20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தென்ஆப்ரிக்காவில் நேற்று தொடங்கியது. இதில் 10 அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதுகின்றன. இதன் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும்.
கேப்டவுனில் நேற்று நடந்த முதல் போட்டியில் ஏ பிரிவில் தொடரை நடத்தும் தென் ஆப்ரிக்கா-இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற தென்ஆப்ரிக்கா பவுலிங்கை தேர்வு செய்ய முதலில் பேட்டிங் செய்த இலங்கை 20 ஓவரில், 4 விக்கெட் இழப்பிற்கு 129 ரன் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் சாமரி அட்டப்பட்டு 68 (50பந்து), விஷ்மி குணரத்னே 35 ரன் அடித்தனர். பின்னர் களம் இறங்கிய தென் ஆப்ரிக்கா 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்களே எடுத்தது. இதனால் 3 ரன் வித்தியாசத்தில் இலங்கை த்ரில் வெற்றி பெற்றது. சாமரி அட்டப்பட்டு ஆட்டநாயகி விருது பெற்றார். தரவரிசையில் 5வது இடத்தில் உள்ள தெ.ஆப்ரிக்காவை, 8வது இடத்தில் உள்ள இலங்கை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்துள்ளது.
2வது நாளான இன்று 2 போட்டிகள் நடக்கிறது. இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு பி பிரிவில் இங்கிலாந்து-வெஸ்ட்இண்டீஸ், இரவு 10 மணிக்கு ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
மந்தனா காயம்:
பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி நாளை தனது முதல் போட்டியில் பாகிஸ்தானுடன் மோத உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா பயிற்சி ஆட்டத்தின் போது இடது கைவிரலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை. இதனால் அவர் பாகிஸ்தானுக்கு எதிராக நாளை ஆட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
