×

தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் தமிழ், ஆங்கில பேச்சுப் போட்டி: முதல் பரிசு ரூ1 லட்சம்

சென்னை: தமிழகத்திலுள்ள அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்துக் கல்லூரிகளின் மாணாக்கர்களுக்காக மாநில அளவிலான தமிழ், ஆங்கில பேச்சுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளதாக தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு முதலமைச்சர் ‘திராவிட மாடல் அரசு’ என்ற லட்சியத்தை தமிழக கல்லூரி மாணவர்களிடம் கொண்டு சேர்க்க, தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் தமிழகத்திலுள்ள, அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்துக் கல்லூரிகளின் மாணவர்களுக்காக தமிழிலும், ஆங்கிலத்திலும் பேச்சுப் போட்டிகளை கடந்த ஆண்டைப்போலவே இவ்வாண்டிலும் நடத்த இருக்கின்றது.

கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் கலை மற்றும் அறிவியல், மருத்துவம், சட்டம். பொறியியல், தொழில்நுட்பம் ஆகிய பாடத்திட்டங்களைக் கடந்து மாணவர்கள் அறிந்தும், உணர்ந்தும் தெரிய வேண்டிய உன்னத விழுமியங்களை மாணவர்கள் மத்தியில் விதைத்திடவும், நமது மொழி, பண்பாடு, இலக்கியம், கலைகள், வரலாறு ஆகியவற்றின் புரிதல்களையும், இன உணர்வினையும் அவர்கள் பெற்றிடவும் இப்போட்டிகள் வழிவகுக்கும். பேச்சுப் போட்டி விதிகள் போட்டிகள் மாவட்ட அளவில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தனித்தனியாக நடத்தப்படும்.

மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்ற மாணவர்கள் கலந்துக்கொள்ளும் மாநில அளவிலான போட்டி இறுதியில் நடத்தப்படும். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமிழுக்கும். ஆங்கிலத்திற்கும் தனித்தனியாக பரிசுகளும், சான்றிதழ்களும்  வழங்கப்படும். தமிழகத்திலுள்ள அனைத்து அரசு அங்கீகாரம் பெற்ற கலை மற்றும் அறிவியல், பொறியியல், மருத்துவம், சட்டம், வேளாண்மை, கால்நடை, பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் தமிழகப் பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சி மாணவர்கள் போட்டிகளில் பங்கு பெற தகுதி உள்ளவர்கள்.

ஒவ்வொரு நிறுவனமும் தங்களது நிறுவனத்தின் சார்பாக தமிழுக்கும், ஆங்கிலத்திற்கும் தலா இரண்டு மாணவர்களை அனுப்பலாம். வருகின்ற  20ம் தேதிக்குள் மாணவர்களின் பெயர்களை கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிகளுக்கு அனுப்ப வேண்டும். மின்னஞ்சல் : smcelocution@gmail.com அஞ்சல் முகவரி : ரவிச்சந்திரன், உறுப்பினர் செயலர், மாநில சிறுபான்மையினர் ஆணையம், முதல் தளம், கலச மஹால், புராதன கட்டிடம், சேப்பாக்கம், சென்னை 600005.

தமிழகத்திலுள்ள அனைத்துக் கல்லூரிகளின் தாளாளர்கள், முதல்வர்கள், பேராசிரியப் பெருமக்கள் அனைவரும் ஆணையம் வகுத்துள்ள விதிகளின்படி நடைபெறும் இப்போட்டிகளில் தங்களது நிறுவனங்களின் மாணவ - மாணவியர் சிறப்பாக பங்கேற்க ஏற்பாடு செய்து ஆணையத்தின் முயற்சிகள் வெற்றி பெற ஒத்துழைப்பினைத் தரவேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil and English Elocution Competition ,Tamil Nadu Minorities Commission , Tamil and English Elocution Competition organized by Tamil Nadu Minorities Commission: First Prize Rs.1 Lakh
× RELATED பாஜவில் சேர்ந்தால் புனிதர்...