×

திரு.வி.க. நகர், தேனாம்பேட்டை மண்டலங்களில் டிரோன் மூலம் நீர்வழித்தடங்களில் கொசுப்புழுக்கள் ஒழிக்கும் பணி: மாநகராட்சி தகவல்

சென்னை: திரு.வி.க. நகர், தேனாம்பேட்டை ஆகிய மண்டலங்களில் டிரோன் மூலம் நீர்வழித்தடங்களில் கொசு புழுக்கள் ஒழிப்பு பணி நடந்தது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி பகுதிகளில் கொசுத் தொல்லை மற்றும் கொசுக்களினால் பரவும் நோய்களை கட்டுப்படுத்த மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொசுக்களை கட்டுப்படுத்தும் பணியில் 3,312 தற்காலிக மற்றும் நிரந்தர பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

 மேலும், கொசுக்கள் உற்பத்தியை கட்டுப்படுத்த 68 எண்ணிக்கையிலான வாகனங்களில் பொருத்தப்பட்ட பெரிய புகைப்பரப்பும் இயந்திரங்கள், கையினால் எடுத்துச் செல்லும் 240 புகைப்பரப்பும் இயந்திரங்கள் மற்றும் 8 சிறிய புகைப்பரப்பும் இயந்திரங்கள் மூலம் காலை மற்றும் மாலை நேரங்களில் குடிசை பகுதிகள் மற்றும் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் புகைப் பரப்பும் பணிகள் நடந்து வருகின்றன.  மேலும், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள நீர்வழித்தடங்களில் கொசுப்புழுக்களின் உற்பத்தியை ஆரம்ப நிலையில் கட்டுப்படுத்த 224 கைத்தெளிப்பான்கள், பேட்டரி மூலம் இயங்கக் கூடிய 300 கைத்தெளிப்பான்கள் மற்றும் 120 விசைத் தெளிப்பான்கள் மூலம் கொசுக்கொல்லி மருந்து தெளிக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள நீர்வழித்தடங்களில் கொசுப்புழுக்களின் உற்பத்தியை கட்டுப்படுத்த டிரோன் இயந்திரங்களைக் கொண்டு கொசுக் கொல்லி மருந்து தெளிக்கப்பட்டு தீவிர கொசுப்புழுக்கள் ஒழிப்பு பணி நடந்து வருகிறது. அதன் அடிப்படையில் நேற்று தேனாம்பேட்டை மண்டலம், வார்டு 114க்குட்பட்ட லாக் நகர் மற்றும் வார்டு 123க்குட்பட்ட அபிராமிபுரம் பகுதியில் உள்ள பக்கிங்காம் கால்வாயில் டிரோன் இயந்திரங்களைக் கொண்டு தீவிர கொசுப்புழுக்கள் ஒழிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும், திரு.வி.க.நகர் மண்டலத்திற்குட்பட்ட ஓட்டேரி குப்பைக் கொட்டும் வளாகம் மற்றும் அண்ணாநகர் மண்டலத்திற்குட்பட்ட முல்லை நகர், தென்றல் காலனி, மலர் காலனி ஆகிய பகுதிகளில் உள்ள ஓட்டேரி நல்லா கால்வாயில் டிரோன் இயந்திரங்களைக் கொண்டு தீவிர கொசுப்புழுக்கள் ஒழிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது.
 இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




Tags : V.K. ,Nagar ,Thenampet , Drone, Waterway, Mosquito, Eradication, Corporation Information
× RELATED ஏராளமான வீடு, கடைகளை கட்டி புழல் ஏரி கால்வாய் ஆக்கிரமிப்பு