நன்றி குங்குமம் டாக்டர்
சிறுநீர் பாதை தொற்று என்பது சிறுநீரகம், சிறுநீர்ப்பை, சிறுநீர் கசிவு நாளம், சிறுநீர்க் குழாய் உள்ளிட்ட சிறுநீரக அமைப்பில் ஏற்படும் தொற்று. சிறுநீர்க் குழாய் வழியாக சிறுநீரகப் பாதையில் பாக்டீரியா நுழைந்து சிறுநீர்ப்பையில் பெருகும்போது இந்தப் பிரச்னை ஏற்படுகிறது. ஆண்களைவிட பெண்களுக்கு சிறுநீர் பாதை தொற்று ஏற்படும் ஆபத்து அதிகம். சிறுநீர்ப்பையில் இந்த தொற்று இருக்கும்போது வேதனையை தரும். அதுவே சிறுநீரகங்களுக்கும் பரவிவிட்டால் இன்னும் கடுமையானதாக இருக்கும். இந்தப் பிரச்னைக்கு ஆன்டி பயாட்டிக் மருந்துகள் மூலம் சிகிச்சையளிக்கப்படுகிறது.
அறிகுறிகள்
சிறுநீர் பாதை தொற்றுகள் சாதாரணமாகவும் பரவலாகவும் ஏற்படக் கூடியவை. பெண்களிடையே ஐந்தில் ஒருவருக்கு வாழ்நாளில் ஒரு முறையாவது ஏற்பட வாய்ப்பு உண்டு. பக்கவாட்டு வயிறு / இடுப்பு பகுதியில் வலி, கீழ் இடுப்பு பகுதியில் அழுத்தம், வலிமிகுந்த சிறுநீர் கழித்தல், சிறுநீரில் ரத்தம், இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல், மேகமூட்டம் போலத் தோன்றும் சிறுநீர், கடுமையான துர்நாற்றம் கொண்ட சிறுநீர், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் உணர்வு ஆகியவை இதற்கான அறிகுறிகளில் அடங்கும்.
தொற்றின் வகைகள்
பைலோன்பிரிடிஸ்: சிறுநீரகத்தில் ஏற்படும் இந்த நோய்த்தொற்றின் அறிகுறிகள் முதுகுவலி அல்லது பக்கவாட்டு வலி, கடுமையான காய்ச்சல், நடுக்கம், குமட்டல், வாந்தி போன்றவை. இந்த நோயில் சிறுநீர்ப்பையில் இருந்து சிறுநீரகங்கள், அவற்றின் சேகரிப்பு அமைப்புகளுக்கு தொற்று பரவும்.சிஸ்டிடிஸ்: இடுப்பில் அழுத்தம், அடிவயிற்றில் அசௌகரியம், அடிக்கடி / வலிமிகுந்த சிறுநீர் கழித்தல், சிறுநீரில் ரத்தம் ஆகியவை இந்த தொற்றுக்கான அறிகுறிகள். இது சிறுநீர்ப்பை தொற்று காரணமாக ஏற்படுகிறது, இதன் விளைவாக சிறுநீர்ப்பையில் வீக்கம் ஏற்படுகிறது.
யுரேத்ரிடிஸ் : சிறுநீரை எடுத்துச்செல்லும் சிறுநீர்க் குழாயில் ஏற்படும் தொற்று. சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் வலி இந்த சிறுநீர் பாதை தொற்றின் வழக்கமான அறிகுறியாகும்.
கண்டறிவது எப்படி?
சிறுநீர் பாதை தொற்றைக் கண்டறிய கீழ்க்கண்ட பரிசோதனைகள் செய்யப்படும்:
மாதிரி பகுப்பாய்வு: தொற்றுநோயைக் கண்டறிய நுண்ணோக்கி மூலம் சிறுநீர் மாதிரியில் பாக்டீரியா அல்லது வெள்ளை ரத்த அணுக்கள் இருக்கின்றனவா என்று பரிசோதிக்கப்படுகிறது. சிறுநீர் பாதை தொற்றைக் கண்டறிய பொதுவாக செய்யப்படும் இரண்டு பரிசோதனைகள்: சிறுநீர் பகுப்பாய்வு மற்றும் சிறுநீரில் நுண்ணுயிர் வளர்கிறதா என்பதைக் கண்டறிவது.
அல்ட்ரா சவுண்ட்: சிறுநீர் பாதை தொற்று அடிக்கடி ஏற்பட்டால் சிறுநீரகம், சிறுநீர்ப்பை சரியாகச் செயல்படுகின்றனவா என்பதைச் சரிபார்க்க அல்ட்ராசவுண்ட் பரிசோதனையை மருத்துவர் செய்யச் சொல்லலாம்.
சிஸ்டோஸ்கோபி - சிறுநீர்க் குழாய் வழியாக சிறுநீர்ப்பையின் உள்ளே பார்க்க லென்ஸும் வெளிச்சம் தரும் ஆதாரமும் பொருத்தப்பட்ட கருவியால் செய்யப்படும் பரிசோதனை. சிறுநீர்ப்பையின் உள்ளே நோய்த்தொற்றுகள், எரிச்சலுக்கான அறிகுறிகளை பார்க்க மருத்துவருக்கு இது உதவுகிறது.சிடி ஸ்கேன் - சிறுநீர் பாதையின் தெளிவான, முப்பரிமாண படங்களை ஒரு சி.டி. ஸ்கேன் வழங்க முடியும். தொற்று, கற்கள், நீர்க்கட்டிகள் அல்லது கட்டிகளை கண்டறிய இந்த சோதனை உதவும்.
சிகிச்சை என்ன?
சிறுநீர் பாதை தொற்றுகளுக்கு மிகவும் நம்பகமான சிகிச்சை ஆன்டி பயாட்டிக் மருந்துகளே. பாக்டீரிய தொற்றுக்கு ஆன்டி பயாட்டிக் மருந்துகள் மூலமாகவும், வைரஸ் தொற்றுக்கு ஆன்டிவைரல் மருந்துகள் மூலமாகவும், பூஞ்சை தொற்றுகளுக்கு ஆன்டி ஃபங்கல் மருந்துகளைக் கொண்டும் சிகிச்சையளிக்கப்படுகிறது. உடலில் இருந்து தொற்றுநோயை வேகமாக வெளியேற்றுவதற்கு, வைட்டமின் சி நிறைந்த உணவை அதிகம் உட்கொள்ள வேண்டும், அதிக தண்ணீர் குடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
தொகுப்பு - ஜி.ஸ்ரீவித்யா
