×

மணப்பாக்கம் டிஎல்எப் முதல் ஆலந்தூர் வரை மெட்ரோ கனெக்ட் திட்ட வாகன சேவை துவக்கம்: மெட்ரோ நிர்வாக இயக்குநர் சித்திக் தொடங்கி வைத்தார்; ஓராண்டுக்குள் நெரிசல் குறைக்கப்படும் என பேட்டி

சென்னை: மெட்ரோ பணிகளால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசல் அடுத்த ஓராண்டுக்குள் குறைக்கப்படும் என மெட்ரோ நிர்வாக இயக்குனர் சித்திக் தெரிவித்தார். சென்னை மணப்பாக்கம் டிஎல்எப் நிறுவனத்தில் ஒரு லட்சம் தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் அதிகம் பேர் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், போரூர், ராமாவரம், நந்தம்பாக்கம், போரூர் போன்ற பகுதிகளில் சென்னை மெட்ரோ ரயிலின் 2ம் கட்ட பணிகள் நடந்து வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை போக்கவும், ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கும் பயணிகள் நேரடியாக டிஎல்எப் ஐடி பூங்காவிற்கு வரும் வகையிலும் ‘மெட்ரோ கனெக்ட்’ எனும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் டிஎல்எப் நிறுவனத்தில் இருந்து ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு நேரடியாக செல்லக்கூடிய குளிர்சாதன வசதியுடன் கூடிய மின் டெம்போ டிராவலர் வாகன போக்குவரத்து சேவை தொடக்க விழா மணப்பாக்கம் டிஎல்எப் வளாகத்தில் நேற்று நடந்தது. வாகனத்தில் பயணிப்பதற்கான கட்டண தொகையாக ரூ.40 வசூலிக்கப்பட உள்ளது. காலை 6 மணிக்கு தொடங்கும் மெட்ரோ கனெக்ட் சேவை இரவு 10 மணி வரை 15 நிமிட இடைவெளியில் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் சித்திக், அமைப்பு மற்றும் இயக்கம் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி, பாஸ்ட்டிராக் நிறுவனத்தை சேர்ந்த அம்பிகாபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டு, 4 டெம்போ டிராவலர் வேன் சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

பின்னர், மெட்ரோ ரயில் மேலாண் இயக்குநர் சித்திக் பேசியதாவது: ஒரே நேரத்தில் சுமார் 119 கிலோ மீட்டர் தொலைவிற்கு கிட்டத்தட்ட ரூ.63,000 கோடி செலவில் மெட்ரோ பணிகள் நடந்து வருகிறது. உலகத்தில் வேறு எங்கும் இப்படி ஒரு திட்டத்தை செயல்படுத்த வில்லை. மெட்ரோ பணிகளில் மாநில அரசு மிக உறுதியாக உள்ளது. பயணிகள் தங்கள் கடைசி கட்ட பயணம் வரை மெட்ரோ நிர்வாகமே பொறுப்பேற்கும் வகையிலான திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றுதான் மெட்ரோ கனெக்ட்.  மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து பயணிகளின் வேலை இடங்கள் அல்லது குடியிருப்பு பகுதிகளுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் சிற்றுந்து, மினி ஆட்டோ போன்றவை இயக்கப்பட்டு வந்தாலும் இதுபோன்ற மெட்ரோ கனெக்ட் பயணிகளின் பயண களைப்பை குறைக்கும். இதுபோன்ற திட்டங்கள் சென்னையில் பல தகவல் தொழில்நுட்ப வளாகங்களுக்கும் இயக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. டிஎல்எப் போல பல நிறுவனங்கள் இந்த திட்டத்தை செயல்படுத்த முன் வரவேண்டும் என்றார்.

பின்னர், சித்திக் நிருபர்களிடம் கூறியதாவது: வருங்கால சேவைக்காக தற்போது போக்குவரத்து நெரிசலில் மக்கள் தவிக்கிறார்கள். சென்னை மெட்ரோ ரயில் சேவை என்பது வருங்காலத்திற்கான திட்டம். 2026ல் சென்னை மெட்ரோ ரயில் கட்டம் 2 நிறைவடைந்து நகரில் முக்கிய பகுதிகள்  இணைக்கப்பட உள்ளது. பணி செய்யும் இடம், பண்டகப் பொருட்கள் விற்கும் பகுதிகள், நகரின் முக்கிய போக்குவரத்துகள் மெட்ரோவுடன் இணைக்கப்படுகிறது. பயணிகளின் கடைசி கட்ட பயணம் வரை மெட்ரோ பொறுப்பேற்று கொள்வதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது. பயணிகளை மெட்ரோ நிலையங்களில் இருந்து முக்கிய பகுதிகளுக்கு கொண்டு சேர்ப்பதற்கான பணியில் மினி வேன் சிற்றுந்து ஈடுபடும். மெட்ரோ கட்டுமான பணிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வருத்தமாக ஒன்றாக இருந்தாலும், அவை தற்காலிகமானது தான்.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு இந்த மினி டெம்போ வேன் சேவை பயனுள்ளதாக இருக்கும். பயணிகளின் கடைசி கட்ட பயணம் வரை மெட்ரோ நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது. மெட்ரோ கனெக்ட் திட்டம் மூலம் பணியிடங்களுக்கு பயண சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  
சுரங்க தோண்டும் பணிகள் சவால் நிறைந்ததாகவே இருக்கும். அது புதிதல்ல. இருப்பினும் பொறியாளர்கள் அதில் கவனம் செலுத்தி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பூந்தமல்லி உள்ளிட்ட இடங்களில் தூண்கள் எழுப்பியதும் சாலைகளை விரிவுபடுத்தியுள்ளோம். அதுபோல மெட்ரோ தூண்கள் எழுப்பியதும் சாலைகளில் உள்ள தடுப்புகளின் அளவு குறைக்கப்படும். ஆற்காடு சாலை, காளியம்மன் கோயில் தெரு போன்ற இடங்களில் அகலம் குறைவாக உள்ளது. அதற்காக பணிகள் நடக்கும்போதே தேவைக்கேற்ப நிலங்களை விரிவுபடுத்தியே பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், அடுத்த ஓராண்டுக்குள் போக்குவரத்து நெரிசல் குறைக்க வழிவகை செய்யப்படும் என்றார்.

* சுரங்கப்பணியால் கட்டிடங்கள் பாதித்தால் கட்டித்தரப்படும்
மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் சித்திக் மேலும் கூறுகையில், ‘‘லைட் மெட்ரோ திட்டங்கள் கும்தாவிடம்  உள்ளது. அதற்கான திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இடையில் உள்ள இடைவெளியை குறைக்க இந்த திட்டம்  செயப்படுத்தப்பட உள்ளது. சுரங்க பணி நடைபெறும் இடங்களில் பயனாளர்களின்  கட்டிடம் பாதிக்கப்பட்டால் மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் கட்டிக்  கொடுக்கப்படும். கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டாலும் மெட்ரோ நிர்வாகம் சரி  செய்து கொடுக்கும்.

* வாட்ஸ்அப் மூலம் மெட்ரோ பயணச்சீட்டு
சென்னை மெட்ரோ ரயில் செயலியில் அவ்வப்போது பிரச்னைகள் வருவதாக புகார்கள் வரும் நிலையில் நிரந்தர தீர்வு காணப்படும். அதோடு வாட்ஸ்அப் மூலம் மெட்ரோ பயணச்சீட்டு வழங்கும் திட்டம் விரைவில்  நடைமுறைப்படுத்தப்படும்.

* கோவை, மதுரையிலும்...
கோவையில் சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு விரிவான திட்ட அறிக்கையில் இறுதி கட்டப் பணிகள் நடந்து வருகிறது. அதேபோல, மதுரையிலும் மெட்ரோ ரயில் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. அரசு ஒப்புதல் கொடுத்தவுடன் கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கும்.


Tags : Metro Connect ,Maniphakam ,Alandur ,Metro ,Managing Director ,Siddik , Manapakkam DLF to Alandur Metro Connect Project Vehicle Service Inauguration: Metro Managing Director Siddiqui inaugurated; Congestion will be reduced within a year, interview said
× RELATED தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி...