×

ஏலகிரி மலை அடிவாரத்தில் விஷமிகள் வைத்த தீயால் பற்றி எரிந்த காடு-அரிய வகை மரங்கள் மூலிகைச் செடிகள் நாசம்

ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டை அருகே ஏலகிரி மலை அடிவாரத்தில் மர்ம நபர்கள் தீ வைத்ததால் காட்டுத்தீ பரவி அரியவகை மரங்கள், மூலிகை செடி, கொடிகள் எரிந்து நாசமானது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. மேலும் இந்த மலை உயரத்துடன் அதிக அளவில் மரங்கள் இருப்பதால்  எந்த காலத்திலும் ஒரே மாதிரியான சீதோசன நிலை நிலவி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் பல்வேறு பகுதிகளில் இருந்து குடும்பத்துடன் ஏலகிரியில் தங்கி கண்டு களித்து செல்கின்றனர்.

மேலும் இந்த மலையில் அரியவகை மரங்கள், மூலிகை செடி, கொடிகள், மான், கரடி, மயில், முயல், குரங்கு, மலைப்பாம்பு உள்ளிட்ட உயிரினங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் மலையடிவாரம் உள்ள பகுதிகளுக்கு சென்று சமூக விரோதிகள் சிலர் மது அருந்திவிட்டு, புகை பிடித்து தீயை போட்டு விடுவதால் சருகுகள் மூலம் பெரிய அளவிலான தீப்பற்றி மளமளவென பரவி காட்டுத்தீயாக மாறி காட்டுப்பகுதிக்குள் எரிந்து நாசமாகிறது.

இந்நிலையில் நேற்று மாலை ஜோலார்பேட்டை அருகே மலையடிவாரத்தில் உள்ள ஊசிநாட்டான் வட்டம், ஏலகிரி கிராமம் அருகே உள்ள தாமரைகுளம் மலையடிவாரத்தில் என 2 இடங்களில்  மர்ம நபர்கள் காட்டுக்கு தீ வைத்துள்ளனர். இதனால் 2 இடங்களில் காட்டுத் தீ மளமளவென பரவி மலையின் உச்சி பகுதிக்கு சென்றது.

இதனால்  காட்டுப்பகுதியில் இருந்த அரிய வகை மரங்கள், மூலிகை செடி கொடிகள், காட்டில் வசிக்கும் சில உயிரினங்கள் போன்றவை எரிந்து கருகி நாசமானது. இதை அறிந்த வனத்துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இதுபோன்ற சமூக விரோத செயலில் ஈடுபடும் மர்மநபர்களை வனத்துறையினர் கண்காணித்து அவர்களுக்கு சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Elagiri hills , Jolarpet: Forest fires spread to rare trees at the foothills of Yelagiri near Jolarpet due to miscreants setting fire.
× RELATED ஏலகிரி மலையில் சூறைக்காற்றுடன் பெய்த...