×

ஏலகிரி மலையில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் தோட்டப்பயிர்கள் சேதம்-அரசு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

ஜோலார்பேட்டை : ஏலகிரி மலையில் உள்ள பல்வேறு கிராமங்களில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் தோட்டப்பயிர்கள் சேதம் அடைந்ததால் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு சூறைக்காற்றுடன் இடி, மின்னலுடன் கூடிய கனமழையால் இங்குள்ள பல்வேறு கிராமங்களில் மரங்கள், மின் கம்பங்கள் விழுந்து சேதமானது. இதனை தொடர்ந்து, மரங்களை அகற்றி சாய்ந்து விழுந்த மின் கம்பங்களை சீரமைத்து மின் வினியோகம் செய்வதற்கான பணியை அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனால் மங்கலம் உள்ளிட்ட சில கிராமங்களில் இரண்டு நாட்களாக மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியுள்ளது. இந்நிலையில், இங்குள்ள அத்தனாவூர், நிலாவூர், மங்களம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களின் விவசாய நிலங்களில் தோட்டப் பயிர்களான பீன்ஸ், மிளகாய், கத்தரி, ரோஜா பூ போன்றவை பயிரிட்டுள்ளனர். ஆனால் திடீரென சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் விவசாய நிலங்களில் இருந்த விவசாய பயிர்கள் மட்டுமின்றி அதிகளவில் தோட்டப் பயிர்கள் சேதமானது. நிலாவூர் பகுதியை சேர்ந்த சாந்திகார காளி என்பவர் தனக்கு சொந்தமான சுமார் 5 ஏக்கர் நிலத்தில் பீன்ஸ், கத்தரி, மிளகாய், வாழை உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் செய்திருந்தார். அதேபோன்று மங்கலம் பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி சுமார் அரை ஏக்கர் நிலத்தில் கொடி பீன்ஸ் விவசாயம் செய்துள்ளார். இதே போன்று இங்கு உள்ள 14 கிராமங்களிலும் விவசாயிகள் தங்களின் நிலத்தில் தோட்டப்பயிர்கள் மற்றும் தானிய பயிர்களை விவசாயம் செய்துள்ளனர். சூறைக்காற்றால் விவசாய நிலங்களில் இருந்த  அனைத்து பயிர்களும் கீழே விழுந்து சேதம் அடைந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post ஏலகிரி மலையில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் தோட்டப்பயிர்கள் சேதம்-அரசு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Elagiri hills ,Jolarpet ,Dinakaran ,
× RELATED சிக்னல் கோளாறால் சென்னை ரயில் நடுவழியில் நிறுத்தம்: பயணிகள் அவதி