×

அதிகாரப்பூர்வ வேட்பாளரை பொதுக்குழு தான் முடிவு செய்ய வேண்டும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி விட்டார்: அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் மீது ஓபிஎஸ் அணியினர் பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை: இடைத்தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ வேட்பாளரை பொதுக்குழு தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், உச்ச நீதிமன்ற தீர்ப்பை அறவே மீறி வீட்டார் என்று ஓபிஎஸ் அணியினர் குற்றம் சாட்டியுள்ளனர். அதிமுக ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம் ஆகியோர், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையை படித்தனர். அதில் கூறியிருப்பதாவது: உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கிணங்க, நீதிமன்றம் சார்பில் பொதுக் குழுவை கூட்டி முடிவெடுக்க நியமிக்கப்பட்ட அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன். இதுசம்பந்தமாக அனைத்து பொதுக் குழு உறுப்பினர்களுக்கும் அனுப்பிய கடிதம் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. எந்த உணர்வுடன் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதோ, அந்த உணர்வையும் உருவத்தையும் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் அறவே நிராகரித்துள்ளார்.

பொதுக் குழு உறுப்பினர்களுக்கு யார், யார் வேட்பாளராக போட்டியிடுகிறார்கள் என்ற முழு விவரத்தையும் அளிக்க வேண்டியது அவரது தலையாய கடமை. இதை உச்ச நீதிமன்றமும் தனது தீர்ப்பில் உறுதி செய்துள்ளது. ஏற்கெனவே அதிமுக வேட்பாளராக செந்தில்முருகன், தேர்தல் அதிகாரி முன்பு மனுத்தாக்கல் செய்துள்ளார். அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் அளித்துள்ள வேட்பாளர் பட்டியலில் அவர் பெயர் இடம்பெறாதது மட்டுமல்ல, இன்னும் தேர்தல் அதிகாரி முன்பு வேட்புமனு தாக்கல் செய்யாத கே.எஸ். தென்னரசு பெயரை மட்டும் அதிமுக அதிகாரப்பூர்வ வேட்பாளராக போட்டியிடுகிறார் என்று அறிவித்து இருக்கிறார். அதிகாரப்பூர்வ வேட்பாளரை பொதுக்குழு தான் முடிவு செய்ய வேண்டும். அப்படி இருக்கும்போது, முன்கூட்டியே அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் ஒருவரை அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கிறார் என்றால் அவர் முன்கூட்டியே ஒரு முடிவுக்கு வந்துவிட்டார் என்று தெரிகிறது.

இது நடுநிலை தவறிய காரியம் மட்டுமல்ல, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அறவே மீறுவதாகும். வேறு யாரேனும் வேட்பாளராக போட்டியிடுவதென்றால், பொதுக் குழு உறுப்பினர்களை முன்மொழியவும், வழிமொழியவும், அவற்றை அத்தகைய வேட்பாளர் ஒப்புக் கொண்டு நிற்பதற்குமான எந்த படிவமும் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேனால் உருவாக்கப்படவில்லை. எங்களுக்கு அனுப்பிய தபாலோடு இணைக்கப்படவும் இல்லை. அப்படியிருக்க, இதர வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற உரிமையை, அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தட்டிப் பறிக்க எந்த அதிகாரமும் இல்லை. இதுவும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணானதாகும். முழு வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு, பொதுக் குழு உறுப்பினர்கள் யாருக்கு கூடுதலாக வாக்களிக்கிறார்கள் என்று எண்ணிப் பார்த்து முடிவெடுக்க அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் கட்டுப்பட்டவர்.

அப்படியிருக்க, ஒருவரை மட்டும் அதிகாரப்பூர்வ வேட்பாளர் என்று அறிவித்தும், அவரை ஆதரிக்கிறீர்களா, மறுக்கிறீர்களா என்று கேட்டும் கடிதம் அனுப்பியிருந்தது வேட்பாளர் தேர்வு முறையாகாது. அது பொது வாக்கெடுப்பு முறையாகும். வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக ஒரு வேட்பாளரை அறிவித்து அவருக்காக பொது வாக்கெடுப்பு நடத்துவது உச்ச நீதிமன்றமே எதிர்பார்க்காத ஒன்று என்றால் மிகையாகாது. இத்தகைய செயல் மூலம், அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் நடுநிலை தவறியது மட்டுமல்ல, உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர் என்ற பதவியையும் அறவே புறக்கணித்துவிட்டு, எடப்பாடி பிரிவினரின் முகவராகவே இயங்கி இருக்கிறார் என்று பொதுக் குழு உறுப்பினர்கள் கருதுவதில் அர்த்தமுண்டு.

வாக்களிக்கும் முறையை எடுத்துக் கொண்டால், வாக்குச் சீட்டை தபால் மூலம் தரவும், அத்தகைய வாக்குச் சீட்டுகளில் குறியீடு செய்து தபால் மூலம் திரும்ப அவை தலைவருக்கு அனுப்பவும் வழிவகை செய்திருக்க வேண்டும். பொதுத் தேர்தலில் எவ்வாறு தபால் வாக்கு முறை செயல்படுத்தப்படுகிறதோ அதே முறையை அவைத் தலைவர் கடைபிடித்து இருக்கலாம்.
மாறாக, வாக்குச் சீட்டுகளை பொதுக் குழு உறுப்பினர்களிடையே நேராகக் கொடுத்து, அவர்கள் கையெழுத்தைப் பெற்று அப்படிக் கொடுத்தவர்களே திரும்பப் பெற்றுக் கொண்டு அவைத் தலைவரிடம் ஒப்படைக்க வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலம் பொதுக் குழு உறுப்பினர்களுக்கு தங்கள் விருப்பம் போல் வாக்களிக்கும் உரிமையும், தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்ற ரகசியத்தை காப்பாற்றும் உரிமையும் பறிக்கப்பட்டுள்ளன.

நேரடியாக வாக்காளர்களை சந்தித்து வாக்குகளைப் பெறும் முறையில் ஆசை காட்டுவதும், அச்சமூட்டுவதும் இடம்பெறும் என்பதும், அத்தகைய தேர்தல் முறை நேர்மையாக நடைபெறாது என்பதும், பலவகையான துஷ்பிரயோகத்திற்கு இடம் தரும் என்பதும் தவிர்க்க முடியாத ஒன்றாகும். ஏன் இந்த முறையை அவர் கையாண்டார் என்பது அவருக்குத்தான் வெளிச்சம். இத்தகைய நேர்மைக்கு மாறான முறையில் வாக்குகளைப் பெற்று பெரும்பான்மையை காட்டுவது வேண்டுமென்றே திட்டமிட்டு செய்யப்படும் சதிச் செயல் என்று நம்புவதற்கு இடமுண்டு. தேர்தல் முறையாகவும், நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறவேண்டும் என எண்ணும் நடுநிலையாளர்கள் இத்தகைய முடிவை எவ்வாறு ஏற்றுக் கொள்வார்கள்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு நல் உள்ளத்தோடு, நடுநிலைமை உணர்வுடன் வழங்கப்பட்டு இருந்தாலும், அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் அதைச் செயல்படுத்திய முறை உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு முரணானது மட்டுமல்ல, நடுநிலை தவறி ஒருசாராரின் கைப்பாவையாகவே அவர் இயங்கி இருக்கிறார் என்பதையே காட்டுகிறது. சட்டம் வெறுமனே செயல்படுத்தப்படுவது மட்டுமல்ல, அதற்கென உள்ள நெறிமுறையின்படி செயல்படுத்தப்பட வேண்டும், அதாவது due process of law. நெறிமுறை தவறி, ஒருசாராருக்காக, ஒருதலைப்பட்சமாக நடத்தப்படுவதை சட்டத்திற்கும், நீதிக்கும் புறம்பான செயலாக பொதுக் குழு உறுப்பினர்கள் கருதுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : General Assembly ,Supreme Court ,OPS ,Mahan Usain , Official candidate should be decided by General Assembly Violation of Supreme Court verdict: AIADMK president Tamilmahan Usain on OPS team Allegation of sensationalism
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு