×

பிரபல இயக்குனர் டி.பி.கஜேந்திரன் உடல் இன்று தகனம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

சென்னை: பிரபல இயக்குனரும், தயாரிப்பாளரும், நகைச்சுவை நடிகரு மான டி.பி.கஜேந்திரன் (72), உடல்நலக்குறைவு காரணமாக நேற்று திடீரென்று மரணம் அடைந்தார். வயது முதிர்வு காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு, அதற்காக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த டி.பி.கஜேந்திரன், நேற்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்தது. அவரது உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். தூத்துக்குடியைச் சேர்ந்த டி.பி.கஜேந்திரன், சென்னை கோஷா ஆஸ்பத்திரியில் பிறந்தார். 8ம் வகுப்பு வரை சென்னை ஆவிச்சி பள்ளியில் படித்தார். அவரது தந்தை சினிமா துறையில் பணியாற்றினார்.

பிறகு புதுவயல் ராமநாதன் செட்டியார் மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்த டி.பி.கஜேந்திரன், அப்போது பள்ளியில் நடந்த ‘சாணக்கியன்’ என்ற நாடகத்தில், சாணக்கியன் வேடத்தில் நடித்தார். மீண்டும் சென்னைக்கு வந்த அவர், சினிமா வாய்ப்பு தேடி அலைந்தார். கடந்த 1979ல் டி.பி.கஜேந்திரனின் திருமணம் நடந்தது. அப்போது இயக்குனர் கே.பாலசந்தர் தயாரிப்பில் நடிகை லட்சுமி இயக்கிய ‘மழலைப் பட்டாளம்’ என்ற படத்தில் பணியாற்றிய டி.பி.கஜேந்திரன், பிறகு கே.பாலசந்தரிடம் ‘தில்லு முல்லு’, ‘தண்ணீர் தண்ணீர்’ ஆகிய படங்களில் பணியாற்றினார். பிறகு இயக்குனர் விசுவிடம் ‘சம்சாரம் அது மின்சாரம்’ உள்பட பல படங்களில் பணியாற்றிய அவர், தனது முதல் படமாக ‘லக்கி ஸ்டார்’ என்ற படத்தை இயக்கினார்.

பிறகு ‘வீடு மனைவி மக்கள்’, ‘எங்க ஊரு காவக் காரன்’, ‘பாண்டிநாட்டு தங்கம்’, ‘எங்க ஊரு மாப்பிள்ளை’, ‘தாயா தாரமா’, ‘நல்ல காலம் பொறந்தாச்சு’, ‘பெண்கள் வீட்டின் கண்கள்’, ‘கொஞ்சும் கிளி’, ‘பாட்டு வாத்தியார்’, ‘பாசமுள்ள பாண்டியரே’, ‘பட்ஜெட் பத்மநாபன்’, ‘மிடில் கிளாஸ் மாதவன்’, ‘பந்தா பரமசிவம்’, ‘சீனாதானா 001’, ‘மகனே என் மருமகனே’ ஆகிய தமிழ்ப் படங்களையும், கன்னடத்தில் ஒரு படத்தையும் இயக்கினார். சில படங்களை சொந்தமாக தயாரித்திருந்த அவர், ஏராளமான படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ளார். ‘பாரதி’ படத்தில் ஏற்றிருந்த குவளைக்கண்ணன் என்ற கேரக்டர், அவரை குணச்சித்திர நடிகராகவும் மாற்றியது. சில டி.வி தொடர்களிலும் அவர் நடித்துள்ளார்.

நகைச்சுவைக்கும், குடும்ப சென்டிமெண்டுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து அவர் தன் படங்களை இயக்கி வந்தார். மறைந்த பழம்பெரும் நடிகை டி.பி.முத்துலட்சுமியின் வளர்ப்பு மகனான டி.பி.கஜேந்திரனுக்கு மனைவியும், 4 மகள்களும் உள்ளனர். இன்று காலை 11 மணிக்கு வடபழநியில் உள்ள ஏ.வி.எம் சுடுகாட்டில் டி.பி.கஜேந்திரன் உடல் தகனம் செய்யப்படுகிறது. அவரது மறைவுக்கு திரையுலகினரும், அரசியல் பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். டி.பி.கஜேந்திரன் சென்னை சாலிகிராமத்தில் சொந்தமாக லாட்ஜ் ஒன்றை நடத்தி வந்தார். அந்த லாட்ஜின் முதல் தளத்துக்கு தனது குரு இயக்குனர் விசு பெயரையும், 2ம் தளத்துக்கு இயக்குனர் கே.பாலசந்தர் பெயரையும், 3வது தளத்துக்கு இயக்குனர் பாரதிராஜாவின் பெயரையும் சூட்டி தனது நன்றிஉணர்வை வெளிப்படுத்தினார்.

Tags : DP Gajendran ,Chief Minister ,M K Stalin , Famous director DP Gajendran's body cremated today: Chief Minister M K Stalin paid tribute in person
× RELATED தமிழகத்தில் கோடைகாலத்தில் தடையின்றி...