×

இசை படைப்புகளுக்கு சேவை வரி விதிப்பை எதிர்த்து ஏ.ஆர்.ரகுமான் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், தனது படைப்புகளுக்கு, 6 கோடியே 79 லட்ச ரூபாய் சேவை வரி செலுத்த வேண்டும் என்று சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) ஆணையர் 2019ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி கடந்த 2020ம் ஆண்டு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இசை படைப்புகளின் காப்புரிமை, பட தயாரிப்பாளர்களுக்கு நிரந்தரமாக வழங்கிய பின் அதன் உரிமையாளர்கள் அவர்கள்தான் என்றும், தன்னிடம் வரி வசூலிப்பது சட்டவிரோதமாகும். தன் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கில் ஜி.எஸ்.டி. ஆணையர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில்,  ஜி.எஸ்.டி. துறையிலேயே மேல்முறையீடு செய்து தீர்வை பெறாமல் தொடரப்பட்ட இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
 இதேபோல, ஒரு கோடியே 84 லட்சம் ரூபாய் சேவை வரி செலுத்த வேண்டும் என்று ஜி.எஸ்.டி ஆணையர் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாரும் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், ஜி.எஸ்.டி. ஆணையரின் உத்தரவை எதிர்த்து ஜி.எஸ்.டி. மேல் முறையீட்டு அதிகாரியிடம் நான்கு வாரங்களில் மேல் முறையீடு செய்யலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். ஜி.எஸ்.டி. வரி விதிப்பது தொடர்பாக விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீசை எதிர்த்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி அனிதா சுமந்த், ஜி.எஸ்.டி இணை ஆணையர் அனுப்பிய நோட்டீசுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு உத்தரவிட்டார்.

Tags : R.R. Rakuman ,High Court , Dismissal of AR Raghuman's suit against levy of service tax on music works: High Court orders
× RELATED அரசு பேருந்துகளின் வகையை...