×

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தூத்துக்குடியில் மீன்பிடி தொழில் பாதிப்பு

தூத்துக்குடி: வங்கக்கடலில் உருவான திடீர் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் மாவட்டத்தில் மீன்பிடி தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல கோடி ரூபாய்க்கான வர்த்தகம் முடங்கியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை தென்மாவட்டங்களில் கடந்தாண்டு போதுமான அளவிற்கு பருமழை பெய்யவில்லை. தற்போது வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வங்கக்கடலில் உருவாகியுள்ள இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் கடற்பகுதிகளில் அதிகமான அளவில் காற்று வீசி வருகிறது.

இதன் காரணமாக தூத்துக்குடி துறைமுகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதலாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் ஆழ்கடல் பகுதிகளில் பலத்த காற்றுடன்  கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை அறிவிப்பின் காரணமாக தூத்துக்குடி மாவட்ட விசைப்படகு, நாட்டுப்படகு மற்றும் பைபர் படகு மீனவர்கள் ஆழ்கடல் மீன் பிடிப்பிற்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். தூத்துக்குடி மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் சார்பில் மீனவர்கள் யாரும் ஆழ்கடலுக்கு செல்லக்கூடாது என நேற்று முன்தினம் மற்றும் நேற்று என தொடர்ந்து 2 நாட்களாக மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மீன்வளத்துறை அதிகாரிகளின் இந்த திடீர் அறிவிப்பால் மாவட்டத்திலுள்ள விசைப்படகு மற்றும்  நாட்டுப்படகு மீனவர்கள் கடந்த 2 தினங்களாக ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 250க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திரேஸ்புரம், வேம்பார், புன்னக்காயல், ஆலந்தலை, மணப்பாடு உட்பட மீனவ கடலோர கிராமங்களில் நாட்டுப்படகுகள் மற்றும் பைபர் படகுகளும் கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.  மீனவர்கள் ஆழ்கடல் மீன் பிடித்தலுக்கு செல்லாத காரணத்தினால் மாவட்டத்தில் மீன்களுக்கு தட்டுப்பாடு  ஏற்பட்டு அவற்றின் விலையும் திடீரென பல மடங்கு உயர்ந்து விட்டது.

மீன்வளத்துறை அறிவிப்பிற்கு முன்னதாக குறைந்த அளவிலான மீனவர்களே மீன்பிடிக்க சென்றிருந்த நிலையில் விற்பனைக்காக வரும் மீன்களின் வரத்து முற்றிலுமாக குறைந்துள்ளது. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் நாள்தோறும் நடைபெற்று வந்த பல கோடி ரூபாய்க்கான மீன் விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மிகவும் குறைந்த அளவில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட மீன்களை  வெளியூர்களில் இருந்து வந்திருந்த மீன் வியாபாரிகள் போட்டிப்போட்டு அதிக  விலை கொடுத்து வாங்கி சென்றனர்.



Tags : Tuticorin ,Bay of Bengal , Fishing industry affected in Tuticorin due to low pressure zone formed in Bay of Bengal
× RELATED தூத்துக்குடியில் சுவாரஸ்யம்:...