ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பணிகள் குறித்து அதிமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் கருங்கல்பாளையம் பகுதியில் நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், மதுரை திருமங்கலம் தொகுதி எம்எல்ஏவுமான ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது: ஈரோடு மண்ணில் நடைபெறும் இடைத்தேர்தலில் அதிமுக எனும் ஆலமரத்தின் மகத்தான இடைக்கால பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அணிவகுத்து நிற்கிறோம். எனது மூத்த மகன் திருமண விழா இந்த மாதம் நடைபெற உள்ளது. ஆனால் அந்த வேலையை விட்டுவிட்டு இன்று ஈரோட்டில் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளேன். எனக்கு கட்சியா? இல்லத்திருமண விழாவா? என்று கேட்டால் முதலில் கட்சிதான் என் உயிரோடு கலந்தது என்பேன். இவ்வாறு அவர் கூறினார்.
* இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் சுயநல கும்பலுக்கு பாடம் கற்பிக்கும் காலம் வரும்: டிடிவி.தினகரன் உறுதி
நெல்லையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக வேட்பாளரின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. நாங்கள் குக்கர் சின்னத்தில் போட்டியிடுகிறோம். அதிமுகவில் ஒரு சிலரின் (எடப்பாடி) சுயநலத்தினால் அந்தக் கட்சி பலவீனம் அடைந்து வருகிறது. அதிமுக வேட்பாளரின் வேட்புமனு படிவத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இருவருமே கையெழுத்திட வேண்டும். ஒருங்கிணைப்பாளர் கையெழுத்திடாவிட்டால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும். அதிகார பலம், பண பலத்தால் அதிமுகவைக் கைப்பற்ற நினைக்கும் சுயநலக் கும்பலுக்கு பாடம் கற்பிக்கும் காலம் விரைவில் வரும். இவ்வாறு அவர் கூறினார்.