×

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்ட பகுதி வாடகை வீடுகளில் தங்க 408 பேருக்கு ரூ.97.92 லட்சம் கருணை தொகை: எழிலன் எம்எல்ஏ வழங்கினார்

சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப்பகுதிகளில் வாடகை குடியிருப்புகளில் தங்க 408 பேருக்கு  ரூ.97.92 லட்சம் கருணை தொகையை எழிலன் எம்.எல்.ஏ வழங்கினார். சென்னை ஆயிரம்விளக்கு தொகுதிக்குட்பட்ட தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப்பகுதிகளில் 408 குடியிருப்புதாரர்களுக்கு ஆயிரம்விளக்கு எம்.எல்.ஏ டாக்டர் எழிலன் தற்காலிக ஒதுக்கீட்டு ஆணைகளையும், மற்றும் கருணைத் தொகையாக தலா ரூ.24 ஆயிரம் வீதம் ரூ.97.92 லட்சத்திலான காசோலைகளையும் நேற்று முன்தினம் வழங்கினார்.  நிகழ்ச்சியில்  பணிகள் குழு தலைவர் சிற்றரசு,  மாமன்ற உறுப்பினர் பிரேமா சுரேஷ், வாரிய  நிர்வாக  பொறியாளர் கீதா, வாரிய பொறியாளர்கள் மற்றும்  அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது, ஆயிரம்விளக்கு எம்.எல்.ஏ டாக்டர் எழிலன் பேசியதாவது: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் சென்னை அப்பாசாமி முதலி தெரு திட்டப்பகுதியில் 64 அடுக்குமாடி   குடியிருப்புகள் இருந்தது. இதை இடித்து விட்டு 420 சதுர அடியில் ரூ.10.49 கோடியில் புதிய குடியிருப்புகள் கட்டப்பட உள்ளது. அதேபோல், பத்ரிகரை  திட்டப்பகுதியில் 144  அடுக்குமாடி   குடியிருப்புகள் இருந்தது.  தற்போது இதனை இடித்து விட்டு 410  சதுர அடியில் ரூ.26.98 கோடியில் புதிய குடியிருப்புகள் கட்டப்பட உள்ளது. தெற்கு மாட வீதி (கருமான்குளம்)  திட்டப்பகுதியில் 24  அடுக்குமாடி குடியிருப்புகள் இருந்தன.

இதனை இடித்து விட்டு 309.35 சதுர அடியில் ரூ.3.60 கோடியில் புதிய குடியிருப்புகள் கட்டப்பட உள்ளது. கங்கைகரைபுரம்  திட்டப்பகுதியில் 176 அடுக்குமாடி   குடியிருப்புகள் இருந்தது. இதனை இடித்து விட்டு 410 சதுர அடியில் ரூ.30.58 கோடியில் புதிய குடியிருப்புகள் கட்டப்பட உள்ளது. இந்த குடியிருப்புதாரர்களுக்கு மறுகட்டுமான காலங்களில் வெளியே வாடகையில் தங்குவதற்காக கடந்த கால ஆட்சியில் ரூ.8000 வழங்கப்பட்டு வந்த  கருணை தொகையை  உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு குடும்பத்திற்கு ரூ.24,000 வழங்க  உத்தரவிட்டுள்ளார்.  அதனடிப்படையில் 408 குடியிருப்புதாரர்களுக்கு தற்காலிக ஒதுக்கீட்டு ஆணைகள் மற்றும் கருணை தொகையாக தலா ரூ.24,000 வீதம் ரூ.97.92 லட்சம் மதிப்பீட்டிலான காசோலைகள் வழங்கப்பட்டது.   


Tags : Urban Habitat Development Board ,Ezhilan ,MLA , Rs 97.92 lakh ex-gratia for 408 people to stay in Urban Habitat Development Board scheme area rented houses: Ezhilan MLA
× RELATED தென்சென்னை தொகுதியில்...