×

தரமணி பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலக்கும் அவலம்

வேளச்சேரி: தரமணி பகுதியில் பாதாள சாக்கடை குழாய் அடைப்பினால், கடந்த சில நாட்களாக அப்பகுதி சாலைகளில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும், அப்பகுதி குடிநீர் குழாய்களிலும் கழிவுநீர் கலக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இவற்றை நிரந்தரமாக சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். சென்னை மாநகராட்சி, அடையாறு 13வது மண்டலம், 178வது வார்டுக்கு உட்பட்ட தரமணி, மகாத்மா காந்தி நகரில் மொத்தம் 26 தெருக்கள் உள்ளன. இங்குள்ள வீடுகளில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் கடந்த 26 ஆண்டுகளுக்கு முன் பாதாள சாக்கடை குழாய் இணைப்பு வழங்கப்பட்டது. அதேபோல் இங்குள்ள வீடுகளுக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. தற்போது, இப்பகுதியில் நெம்மேலி குடிநீர் திட்டத்தின்கீழ் ஒரு நாள் விட்டு ஒருநாள் காலை 6 மணி முதல் 8 மணிவரை குழாய்கள் மூலமாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அவற்றை அப்பகுதி மக்கள் பாத்திரங்களில் பிடித்து வைத்து பயன்படுத்தி வருகின்றனர். தரமணி பகுதிகளில் ஏராளமான தனியார் ஐடி உள்பட பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களும் இயங்கி வருகின்றன.

இதனால் மேற்கண்ட பகுதிகளில் அவ்வப்போது பாதாள சாக்கடை அடைப்புகள் ஏற்படுவதும், அவற்றை மாநகராட்சி ஊழியர்கள் தற்காலிகமாக அகற்றி செல்வதும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக மீண்டும் தரமணி பகுதிகளான பீலியம்மன் கோயில் தெரு, மகாத்மா காந்தி நகருக்கு உட்பட்ட மசூதி தெரு, ராஜாஜி தெரு, டி.கே.கபாலி தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடையின் மேல்மூடிகள் உடைந்து, அதன் வழியே தெருக்கள் மற்றும் சாலைகளில் கழிவுநீர் வெளியேறி தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், அப்பகுதி மக்கள் நோய்தொற்றுகள் பரவும் அபாயநிலை ஏற்பட்டிருக்கிறது.

மேலும், அவ்வழியே சாலைகளில் நடந்து செல்பவர்மீது கழிவுநீர் தெறித்து வருகிறது. இதனால் கடந்த ஒரு மாதமாக அங்குள்ள சாலையோர குழாய்களில் வரும் குடிநீரிலும் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் இத்தண்ணீரை பயன்படுத்துபவர்களுக்கு அரிப்பு மற்றும் விஷ காய்ச்சல் ஏற்படுகிறது. இதனால் பல்வேறு தொற்று நோய் பரவும் அவலநிலையும் நீடிக்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர கழிவுநீரகற்று வாரிய அதிகாரிகளிடம் பலமுறை இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

எனவே, இப்பகுதி மக்களின் உடல்நலனை கருத்தில்  கொண்டு, தரமணி பகுதிகளில் பாதாள சாக்கடை அடைப்புகளை நிரந்தமாக நீக்கவும், அவற்றின் மேல்மூடிகளை உடனடியாக சீரமைக்கவும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : Taramani , Sewage mixing with drinking water in Taramani area
× RELATED ‘ஜெய்லர் 2’ உண்டா? தனது பிறந்தநாளில் பதிலளித்த ஜெய்லர் மகன்!