×

ஊட்டி காந்தல் பகுதியில் நூலகம், அறிவுசார் மையம் கட்டும் பணி தீவிரம்

ஊட்டி : ஊட்டி காந்தல் பகுதியில் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ, மாணவிகளின் வசதிக்காக ரூ.1.35 கோடி மதிப்பீட்டில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கட்டும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு இளம் தலைமுறையினர் முறையாக இடைவெளியின்றி கல்வி கற்க வசதியாக பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. மேலும் கல்வியுடன் சேர்த்து பொது அறிவை வளர்த்து கொள்ளும் வகையில் மாவட்டம் தொறும் புத்தக கண்காட்சி நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இதுதவிர நான் முதல்வன் திட்டம், அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள் புத்தகங்கள் வாசிப்பதன் மூலம் அறிவை வளர்த்து கொள்ளும் வகையிலும், சிவில் சர்வீஸ், டிஎன்பிஎஸ்சி, காவலர் தேர்வு, எஸ்எஸ்சி, உள்ளிட்ட பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்பெறும் வசதிக்காகவும் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கட்டப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.

இதன் அடிப்படையில் ஊட்டி நகராட்சி காந்தல் பகுதியில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கட்டிடம் கட்ட 2021-22ம் ஆண்டுக்கான கேஎன்எம்டி, திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து இதற்காக நிலம் தேர்வு செய்யப்பட்டு மண் உறுதி தன்மை பரிசோதிக்கப்பட்டு நிலம் சமன்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கட்டுமான பணிகள் துவங்கின. பருவமழை காரணமாக பணிகள் மெதுவாக நடைபெற்று வந்தது. தற்போது மழை முடிந்து வெயிலான காலநிலை நிலவி வரும் நிலையில் கட்டுமான பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகிறது.

ஒரிரு மாதங்களில் கட்டுமான பணிகள் அனைத்தும் முழுமையாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தொிவித்தனர். நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஊட்டி காந்தல் பகுதியில் ரூ.1.35 கோடி மதிப்பில் அறிவுசார் மையம் மற்றும் நூலகம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. நவீன வசதிகளுடன் கட்டப்படும் இந்த அறிவுசார் மையத்தின் மூலம் இளைய தலைமுறையினருக்கு பயிற்சி வகுப்புகள், மின் கற்றல் தளங்கள் உள்ளிட்ட வசதிகள் ஒரே இடத்தில் கிடைக்கும். டிஜிட்டல் வடிவிலும் புத்தகங்களை படிக்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. ஒரே இடத்தில் போட்டி தேர்வுகளுக்கு தேவையான அனைத்து புத்தகங்கள், வினா வங்கிகள், நாளிதழ்கள் போன்றவற்றை படிக்கலாம். இளைஞர்களுக்கு பெரும் பயனுள்ளதாக இருக்கும்’’ என்றனர்.



Tags : Ooty Kanthal , Ooty: Library and intellectual facilities at an estimated cost of Rs 1.35 crore for the convenience of students preparing for competitive examinations in Ooty Kanthal area.
× RELATED ஊட்டி காந்தல் பகுதியில் கலெக்டர் ஆய்வு