×

நாமக்கல் மண்டலத்தில் 7 கோடி முட்டைகள் தேக்கம்: பண்ணைகளில் 480 காசுக்கு முட்டை விற்பனை

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் 7 கோடி முட்டைகள் தேக்கமடைந்துள்ளன. பண்ணைகளில் ரூ.480க்கு முட்டை விற்பனையாகிறது. நாமக்கல் மண்டலத்தில், தினமும் 4 கோடி முட்டைகள் உற்பத்தியாகிறது. இந்த முட்டைகள் தமிழக அரசின் சத்துணவு திட்டம், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. 52 கிராம் கொண்ட பெரிய முட்டைகளுக்கு என்இசிசி வாரம் 3 முறை விலை நிர்ணயம் செய்து வருகிறது. தற்போது ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 545 காசாக இருக்கிறது. ஆனால் பண்ணைகளில் வியாபாரிகள் என்இசிசி விலையில் இருந்து 65 காசுகள் வரை குறைத்து 480 காசுக்கே வாங்கி செல்கிறார்கள்.  

என்இசிசி நிர்ணயம் செய்யும் விலையில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக பண்ணையாளர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். இது குறித்து தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் கூறுகையில், ‘என்இசிசி நிர்ணயம் செய்யும் விலையில் 60 முதல் 70 காசுகள் வரை மைனஸ் விலை போகிறது. வெளி மாநிலங்களில் முட்டை விலை நாமக்கல் மண்டலத்தை விட குறைவாக இருக்கிறது. அதனால் நாமக்கல்லில் இருந்து வெளி மாநிலங்களுக்கு முட்டை செல்வது குறைந்து வருகிறது.

இதனால் பண்ணைகளில் தினமும் 2 நாள் முட்டைகள் தேங்குகிறது. பண்ணைகளில் சுமார் 7 கோடி முட்டைகள் வரை தேங்கியுள்ளன. முட்டையின் தேக்கத்தை குறைக்க வியாபாரிகள் கேட்கும் விலைக்கு கொடுக்கவேண்டியுள்ளது,’ என்றார். நாமக்கல் மண்டலத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் உற்பத்தியாகும் 50 கிராம் எடைக்கு மேல் உள்ள முட்டைகளை, என்இசிசி நிர்ணயம் செய்யும் விலைக்கு தான் விற்க வேண்டும் என இரு வாரத்துக்கு முன் என்இசிசி மற்றும் பண்ணையாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆனால் மார்க்கெட் நிலவரம் வேறு மாதிரி இருப்பதால், அதை வியாபாரிகள் பின்பற்றுவதில்லை. என்இசிசி நிர்ணயம் செய்யும் விலையில் இருந்து குறைத்து வாங்கி செல்கிறார்கள்.

Tags : Namakkal , 7 Crore Eggs Backlog in Namakkal Mandal: Farms Sell Eggs at Rs 480
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...