அறநிலையத்துறை அதிகாரிகள் மீது கூறும் குற்றச்சாட்டை ஆதாரத்துடன் தெரிவித்தால் நடவடிக்கை: அமைச்சர் சேகர்பாபு உறுதி

சென்னை: அறநிலையத்துறையின் மீதான எந்த ஒரு குற்றச்சாட்டையும் உரிய சான்றுகளுடன் அளித்தால், அதற்கான  நடவடிக்கை எடுக்க நாங்கள் தயாராக உள்ளோம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கு ஸ்ரீபார்த்தசாரதி சுவாமி ஸ்ரீபாதம் சேவா டிரஸ்ட் சார்பில் சுவாமி திருவீதி உலா வருவதற்காக 19 கிலோ எடையில் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளி பல்லக்கு வழங்கும் நிகழ்ச்சி நேற்று பார்த்தசாரதி கோயிலில் நடைபெற்றது. ஸ்ரீபார்த்தசாரதி சுவாமி ஸ்ரீபாதம் டிரஸ்ட் சார்பில் வழங்கப்பட்ட வெள்ளி பல்லக்கை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பெற்றுக்கொண்டார்.

இதனை அடுத்து வெள்ளி பல்லக்கை அமைச்சர் சேகர்பாபு அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் சுமந்து வந்தனர். இதனை அடுத்து அமைச்சர் சேகர்பாபு நிருபர்களுக்கு அளித்த பேட்டி:  அறநிலைத்துறை குறித்து தெரிவிக்கும் கருத்திற்கும், குற்றச்சட்டிற்கும் பதில் சொல்ல நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். எங்களுக்கு மடியில் கனமில்லை; வழியில் பயமில்லை. ஆதாரமற்ற புகார்களை அவர்கள் தெரிவிக்கிறார்கள். எந்த ஒரு குற்றச்சாட்டையும் உரிய சான்றுகளுடன் அளித்தால் அதற்குரிய விளக்கங்களையும், அதன் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் நாங்கள் தயாராக இருக்கின்றோம். அறநிலையத்துறை சார்பில் நான் ஒரு உதவியாளரையோ வாகனத்தையோ பெறவில்லை.

நிதிகள் அனைத்தும் கோயில் பணிகளுக்காக மட்டுமே செலவிடப்படுகிறது. எந்த தேதியில் எப்பொழுது கபாலீஸ்வரர் கோயிலுக்கான கூட்டம் நடைபெற்றது, அதில் இருக்கும் குற்றச்சாட்டுகள் என்ன என்பதை உரிய ஆதாரங்களுடன் நிரூபித்தால் அதற்கான விளக்கங்களை அளிக்க அறநிலைய த்துறை தயாராக இருக்கிறது. 282 சிலைகள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன, 62 சிலைகள் அடையாளம் காட்டப்பட்டுள்ளன. இதுவரை இந்த அளவிற்கு சிலைகள் இந்த அளவிற்கு மீட்கப்படவில்லை. இது ஆன்மிக புரட்சிக்கான அரசு என்றே சொல்லலாம். கடந்த ஆட்சியில் இல்லாத அளவிற்கு 2,500,கோயில்களுக்கு ஒரே ஆண்டில் 50 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.

ஒருகால பூஜை உள்ள கோயில் அர்ச்சகர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.1,000 வழங்கியது, ஓய்வூதியத்தை 1,000த்திலிருந்து 3,000ஆக உயர்த்தி வழங்கியது, ஆயிரம் ஆண்டுகள் பழையான 100க்கும் மேற்பட்ட கோயில்களுக்கு 100 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கியது, மக்கள் வெகுவாக பாராட்டுகின்ற அரசு இந்த திமுக அரசு 15 மலைக்கோயில்களில் மருத்துவமனை, 15 கோவில்களில் நாள்தோறும் அன்னதான திட்டம் மக்கள் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டுள்ளார்கள். இறையன்பர்களும் தெய்வங்களும்  மகிழ்ச்சியாக உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: