×

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் தெருநாய்கள் பெருக்கத்தால் அதிகரிக்கும் ரேபீஸ் பாதிப்பு

* மனித உயிர்களை பாதுகாக்க வேண்டும்
* நிரந்தர நடவடிக்கைக்கு கோரிக்கை


வேலூர்: வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பெருகி வரும் தெருநாய்களின் தொல்லையால் ரேபீஸ் நோய் பாதிப்பு அதிகரித்துள்ளது. நாய்களின் உயிர்களைவிட மனித உயிர்கள் மிக முக்கியம். எனவே அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் நிரந்தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்ைக வைத்துள்ளனர். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் மட்டும் தற்போதைய நிலையில் சுமார் 3 லட்சம் தெருநாய்கள் சுற்றித்திரிவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் வேலூர் மாநகராட்சி மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் மட்டும் 30 ஆயிரம் தெருநாய்கள் வரை சுற்றி வருவதாக தெரிகிறது.

நாய்களின் தொல்லைக்கு முடிவு கட்டவும், அவற்றின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தவும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அனைத்து நகராட்சி, பேரூராட்சிகளில் தொடங்கப்பட்டது. ஆனால் ஒரு சில வாரங்களில் இந்த சிகிச்சை நடைமுறை நின்று போனது. இந்நிலையில், வேலூர் மாநகராட்சி சார்பில் நாய்களின் இனபெருக்கத்தை தடுக்க நவீன முறையில் கடந்த 2009-10ம் ஆண்டு முத்துமண்டபம் அருகே தெருநாய்களை பிடித்து வந்து அறுவை சிகிச்சை செய்வதற்காக கட்டிடம் கட்டப்பட்டதுடன் தேவையான உபகரணங்களும் அங்கு வைக்கப்பட்டன. அப்போதும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தெருநாய்கள் பிடித்து வரப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதுவும் பின்னர் கைவிடப்பட்டது. இதையடுத்து சென்னை புளூ கிராஸில் பயிற்சி பெற்ற ஒரு மேற்பார்வையாளர், ஒரு சுகாதார ஆய்வாளர் மற்றும் 8 பணியாளர்களை கொண்ட மாநகராட்சிக்குழுவினர் மூலம் 2014ம் ஆண்டு ஜூன் முதல் வாரம் முதல் தினமும் 60 நாய்கள் வீதம் பிடிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்று 2015 மார்ச் மாதத்துக்குள் 40 சதவீதம் தெரு நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்று அப்போதைய வேலூர் நகராட்சி நிர்வாகம் அறிவித்தது. ஆனால், அது வார்த்தையோடு நின்று போனது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் அப்போது கேட்டபோது, ‘கால்நடை மருத்துவர்கள் பற்றாக்குறையால் பணி நிறுத்தப்பட்டுள்ளது.

அதோடு மத்திய விலங்குகள் நல வாரியம் நாய் ஒன்றுக்கு அறுவை சிகிச்சை, மருந்து, உணவு, நான்கு நாட்களுக்கான பராமரிப்பு செலவுக்கு என ரூ450 வழங்குகிறது. இதில் அறுவை சிகிச்சை செலவும், டாக்டருக்கு நாய் ஒன்றுக்கு ரூ60 மட்டுமே வழங்கப்படுகிறது. அவர்கள் ரூ150 கேட்கின்றனர். கால்நடை இணை இயக்குனரிடத்தில் பேசி வருகிறோம்’ என்றனர்.
ஆனால் அந்த பேச்சும் காற்றோடு கரைந்து போனது. இந்த நிலையில் வேலூரில் 60 வார்டுகளில் பொதுமக்கள் எழுப்பும் முக்கிய பிரச்னை தெருநாய் தொல்லைதான். இதே நிலைதான் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் நிலவுகிறது. வேலூர் நகரில் மட்டுமே 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தெருநாய்களும், மாவட்டம் முழுவதும் ஏறத்தாழ 60 ஆயிரம் தெருநாய்களும் சுற்றி வருகின்றன.

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் நாள் ஒன்றுக்கு 200 முதல் 250 பேர் வரை வெறிநாய்க்கடிக்கு ஆளாகின்றனர். வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மட்டும் நாள் ஒன்றுக்கு 50 பேர் புதியதாக நாய்க்கடியால் ஏற்படும் ரேபீஸ் பாதிப்புக்கு ஆளாகி சிகிச்சைக்கு செல்கின்றனர். இவர்களுடன் தொடர் சிகிச்சைக்கு வருபவர்கள் எண்ணிக்கை 200 ஆக உள்ளது. அதேபோல், தெருநாய்களால் ஏற்படும் விபத்துகளால் மட்டும் மாதத்துக்கு நான்கு மாவட்டங்களிலும் 7 பேர் வரை தலையில் அடிப்பட்டு இறப்பதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில்தான் வேலூர் மாநகராட்சியில் தெருநாய்களுக்கான கருத்தடை சிகிச்சை மையத்தை மீண்டும் சுறுசுறுப்புடன் செயல்பட வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வேலூர் மாநகராட்சி மேற்கொள்ளும் இத்தகைய நடவடிக்கையை வேலூர், ராணிப்பேட்டை,  திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பிற நகராட்சி, பேரூராட்சி  நிர்வாகங்களும் கூட்டாகவும், தனித்தனியாகவும் இணைந்து தெருநாய்களின்  பெருக்கத்தை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். நாய்களை பிடித்து அறுவை சிகிச்சை செய்த பின்னர் அவற்றை பொதுஇடங்களில்  விட்டு விடுகின்றனர். பின்னர் அவற்றுக்கு தேவையான உணவு கிடைக்காதபோது  மனிதர்களை கடித்து குதறுகின்றன. எனவே, நாய்களை பராமரிக்கும் வகையில்  பாதுகாப்பு இல்லத்தை ஏற்படுத்த வேண்டும் என்று வெறிநாய்க்கடிக்கு  ஆளானவர்கள் கோரிக்ைக வைக்கின்றனர். அதேநேரத்தில்  தெருநாய்கள் விஷயத்தில் விலங்குகள் நல அமைப்புகள் தலையீடு அதிகம் உள்ளதாக  சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தெருக்களில் சுற்றித்திரியும் தெருநாய்களின் உயிர்களை விட மனித உயிர்கள் முக்கியம். அதேபோல், அரசு  எடுக்கும் முயற்சிகளுக்கு விலங்குகள் நல அமைப்புகள் போதிய ஒத்துழைப்பு  கொடுப்பதுடன், தெருநாய்களால் மனிதர்கள் பாதிக்கப்படாத நிலையில் அவற்றை  பாதுகாக்கும் நடவடிக்கைகளை அரசுடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும். வெறிநாய்க்கடியில் இருந்தும்,  நாய்களால் ஏற்படும் சாலை விபத்துகளின் எண்ணிக்கைக்கு முற்றுப்புள்ளி  வைப்பதற்கும் மாநில அரசும், மாவட்ட நிர்வாகங்களும் உரிய நிரந்தர  நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி அவசியம்
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘வெறிநாய்களுக்கு ஆண்டு முழுவதும் பல மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்டு வரை 8 மாதங்களில் 18 பேர் வெறிநாய் கடிக்கு உயிரிழந்துள்ளனர். வெறிநாய் கடித்தாலோ அல்லது தெருநாய் கடித்தாலோ தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். வெறி நாய்களுக்கு ரேபீஸ் என்னும் ‘வெறிநோய்’ பாதிப்பு இருக்கும். அது மனிதனை கடிக்கும் போது, அந்த நோய் உடலில் பரவத்தொடங்கி உயிர் பலி ஏற்படுகிறது. தடுப்பூசி மட்டுமே ரேபீஸ் பாதிப்புக்கு பாதுகாப்பு. வெறிநாய்க்கடிக்கு 5 தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். 2 கைகளிலும் தொடர்ந்து போட்டுக் கொண்டால் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் அலட்சியமாக இருந்தால் 100 சதவீதம் உயிரிழப்பு ஏற்படும். வெறிநாய்கடி தடுப்பூசி அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 20 வயல் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எனவே நாய் கடித்தால் உடனே தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். ரேபிஸ் நோய்த்தொற்று ஏற்பட்ட நான்கு முதல் பத்து நாட்களுக்குள் ஒரு நாய் இறந்துவிடும். அத்தகைய சூழ்நிலையில் ஒருவரை தெரு நாய் கடித்தால், அந்த நாளில்தான் அதற்கு தொற்று ஏற்பட்டிருக்க வேண்டும் என்று கருதி அது கண்காணிக்கப்படுகிறது. ஆகவே ஒரு தெருநாய் கடித்தால், நீங்கள் கட்டாயமாக ஊசி போட்டுக்கொள்ள வேண்டும். ரேபிஸ் நோயில் இரண்டு வகைகள் உள்ளன.  முதலாவது ‘டம்ப்’ ரேபீஸ்.

இந்த வகை நோயில் நாயின் உடலின் நரம்புகள் தளர்ந்து, அது ஒரு மூலையில் படுத்திருக்கும். பின்னர் அது பக்கவாதத்தால் முடங்கி நான்கு நாட்களில் இறந்துவிடும். இரண்டாவது ‘பியூரியஸ்’ ரேபீஸ். இதில் நாய் இறப்பதற்கு பத்து நாட்கள் ஆகும். இந்த நேரத்தில் அது மிகவும் ஆக்ரோஷமாக மாறும். இந்த வகை ரேபீஸில் நாய் ஆக்ரோஷமாக மாறும். உமிழ்நீரை விழுங்க முடியாமல் போவதால் அதன் உமிழ்நீர் வடியும். தொண்டை நரம்புகள் செயலிழக்கத் தொடங்குகின்றன. செய்வதறியாமல் அவை கடிக்கத் தொடங்கும். முதலில் நாய் கடித்த இடத்தை தண்ணீர் மற்றும் சோப்பினால் குறைந்தது பத்து நிமிடங்களாவது கழுவ வேண்டும். அதன் பிறகு பெட்டாடைனை பயன்படுத்த வேண்டும்.

வழக்கமாக வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. எனவே ரேபீஸ் ஆபத்து இல்லை. அந்த நிலையில் அதை ஒரு சாதாரண காயம் போல கருதுங்கள். ஆனால் ஒரு தெரு நாய் உங்களைக் கடித்தால், நாயை கண்காணியுங்கள். நாய் இறந்தால், ‘ரேபீஸ் தடுப்பூசி’ போட்டுக்கொள்ளுங்கள். நாய் கடித்த நாள், 3ம் நாள், 7ம் நாள், 14ம் நாள், அதன்பின் 28ம் நாள் என்று 5 ஊசிகள் போடப்படுகின்றன. ஒரு ரேபீஸ் தடுப்பூசியின் விலை ரூ300-400 வரை ஆகும். அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படுகிறது.

4 வாரங்களில் 104 நாய்களுக்கு கருத்தடை
இதுகுறித்து மாநகராட்சி நல அலுவலர் கணேஷிடம் கேட்டபோது, ‘தெருநாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த தொண்டு நிறுவனம் ஒன்றுடன் மாநகராட்சி கரம் கோர்த்துள்ளது. மாநகராட்சி 50 சதவீதமும், தொண்டு நிறுவனம் 50 சதவீதமும் என மொத்தம் ரூ1,650 என்ற ரீதியில் நாய் ஒன்றுக்கு கருத்தடை சிகிச்சை, பராமரிப்பு, மருந்துகள், கால்நடை மருத்துவர் மற்றும் பணியாளர்களுக்கான செலவினத்தை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு பணிகள் நடந்துள்ளது.

முதல் தொகுதியில் 1200 தெருநாய்கள் வரை பிடித்து கருத்தடை சிகிச்சை மேற்கொண்டு அவற்றை ஏற்கனவே அதன் வாழ்விடத்தில் கொண்டு சேர்ப்பது என்ற திட்டத்தின் கீழ், கடந்த 4 வாரங்களில் இதுவரை 104 தெருநாய்களுக்கு அங்கு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்ததும் தெருநாய்களுக்கான கருத்தடை சிகிச்சை தீவிரமாகும்’ என்று கூறினார்.

ஆண்டுக்கு 65 ஆயிரம் பேர் உயிரிழப்பு
உலக அளவில் ‘ரேபீஸ்’ எனப்படும் வெறிநாய்க்கடி நோய் அதிகரித்து வருகிறது. நாய் மட்டுமின்றி பூனை, குரங்கு உள்ளிட்ட விலங்குகள் கடிப்பதாலும் இந்நோய் ஏற்படுகிறது. உலக அளவில் இந்நோயால் சராசரியாக ஆண்டுக்கு 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். இந்தியாவில் மட்டும் இந்நோய் காரணமாக உயிரிழப்பு எண்ணிக்கை 15 ஆயிரமாக அதிகரித்துள்ளது. ரேபீஸ் நோய் அதிகரித்து வருவதையொட்டி, இந்நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்த தேவையான அளவு தடுப்பூசியை கொள்முதல் செய்து வைத்துக் கொள்ளுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒன்றிய அரசு ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது.

Tags : Vellore ,Ranipet ,Tirupattur ,Tiruvannamalai , Vellore, Ranipet, Tirupattur, Tiruvannamalai districts increase the incidence of rabies due to the proliferation of stray dogs.
× RELATED அரசு கலை கல்லூரிகளில் பகுதி நேரமாக...