*பொதுமக்கள் பாராட்டு
வேலூர் : வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கலெக்டர்கள், எஸ்பி, மேயர், கமிஷனர் என்று ஒட்டுமொத்தமாக பெண் அதிகாரிகள் ஆட்சி செய்வதை மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். பெண்கள் மட்டுமே அன்னையாகவும், மனைவியாகவும், மகளாகவும், சகோதரியாகவும், தோழியாகவும், ஆசிரியையாகவும் நம் வாழ்வில் ஏற்றம் தருபவர்களாக திகழ்ந்து வருகின்றனர். இப்படி, நம் அனைவரது வாழ்வில் நீக்கமற நினைவில் நிற்பவர்களாக பெண்கள் உள்ளனர். அதுமட்டுமின்றி மங்கையர் சாதிக்காத சாதனையும் உண்டோ இந்த பாரில் என்று கேள்வி எழுப்பும் விதமாக விண்ணிலும், மண்ணிலும் என அனைத்து துறைகளிலும் சாதனைகளை படைத்து வருகின்றனர்.
அந்த வரிசையில் சாதனை மங்கையர்களாக திகழும் பெண்கள் பல்வேறு துறைகளிலும், சமூகம் மற்றும் குடும்ப பணிகளிலும் சாதித்து பெருமை கொள்ள வைக்கின்றனர். அதோடு பெண்களை ஊக்குவிக்கவும், உற்சாகப்படுத்தும் விதமாகவும் கல்வி, தொழில், அரசியல் என்று அனைத்திலும் சம உரிமை வழங்கி அழகு பார்த்து வருகிறது தமிழ்நாடு அரசு. அதன்படி பல சோதனைகளையும் கடந்து சாதனைகளை படைத்து மாவட்டங்களை ஆட்சி செய்து வரும் பெண் அதிகாரிகளை பார்க்கலாம்.
அந்த வகையில், வேலூர் மாவட்டத்தில் கலெக்டர் சுப்புலட்சுமி, டிஆர்ஓ மாலதி, ஆர்டிஓக்கள் கவிதா, சுபலட்சுமி, திட்ட இயக்குனர் ஆர்த்தி, மேயர் சுஜாதா, கமிஷனர் ஜானகி, துணை கமிஷனர் சசிகலா, உதவி கமிஷனர் ஜெபக்கிறிஷ்டோபர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி என்று அனைத்து துறைகளிலும் பெண்கள் ஆட்சி செய்து மாவட்டத்தை முன்னேற்ற பாதையில் அழைத்துச்செல்கின்றனர்.
அதேபோல், ராணிப்பேட்டை மாவட்டத்தில் கலெக்டர் சந்திரகலா, எஸ்பி கிரண்ஸ்ருதி, ஆர்டிஓ பாத்திமா, திட்ட இயக்குனர் லோகநாயகி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, நகராட்சி தலைவிகள் சுஜாதா (ராணிப்பேட்டை), ஹரிணி (வாலாஜா), தமிழ்செல்வி (சோளிங்கர்), தேவி (ஆற்காடு), லட்சுமி (அரக்கோணம்) என்று ராணிப்பேட்டை மாவட்டத்தை பெண் அதிகாரிகள் ஆட்சி செய்து வருகின்றனர். 2 மாவட்டங்களில் 90 சதவீதம் பெண்களால் ஆட்சி செய்யப்படுவதை மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
The post வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் கலெக்டர்கள், எஸ்பி, மேயர், கமிஷனராக ஆட்சி செய்யும் பெண் அதிகாரிகள் appeared first on Dinakaran.