×

2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று தென்பெண்ணை ஆற்றில் அண்ணாமலையார் தீர்த்தவாரி: வழியெங்கிலும் பக்தர்கள் திரண்டு தரிசனம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் அருள்தரும் அண்ணாமலையாருக்கு தென்பெண்ணை ஆறு, வடபெண்ணை எனப்படும் செய்யாறு மற்றும் கவுதம நதி ஆகியவற்றில் தீர்த்தவாரி நடத்துவது தனிச்சிறப்பு. தீர்த்தவாரியின்போது, சந்திரசேகரர் திருவடிவாக அண்ணாமலையார் தீர்த்தவாரியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிவார். தை மாதம் 5ம் நாளன்று தென்பெண்ணை ஆற்றிலும், ரத சப்தமி நாளில் கலசப்பாக்கத்தில் உள்ள செய்யாற்றிலும், மாசி மகத்தன்று பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள கவுதமநதியிலும் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.

அதன்படி தை 5ம் நாளான இன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் தீர்த்தவாரி விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி இன்று காலை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இருந்து சிறப்பு அலங்காரத்துடன் சந்திரசேகரர் எழுந்தருளி, தென்பெண்ணை ஆற்றுக்கு புறப்பாடு நடந்தது. அப்போது, திருவண்ணாமலையில் இருந்து மணலூர்பேட்டை செல்லும் சாலையின் வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு சுவாமிக்கு மண்டகபடி எனப்படும் சீர்வரிசை பொருட்களை சமர்பித்து வழிபட்டனர்.

தொடர்ந்து பகல் 12 மணியளவில், தென்பெண்ணையாற்றில் சந்திரசேகரர் எழுந்தருளினார். அப்போது, மணலூர்பேட்டை விநாயகர், மாரியம்மன், செல்லியம்மன், முத்துமாரியம்மன், சிவகாம சுந்தரி சமேத அகத்தீஸ்வரரும் சந்திரசேகரருடன் எழுந்தருளினர். அங்கு சுவாமிக்கு தீர்த்தவாரி நடத்தப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டனர். சந்திரசேகர் இன்று இரவு அங்குள்ள பகுதிகளில் வீதி வலம் வருவார். நாளை மீண்டும் திருவண்ணாமலையை வந்தடைவார்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக, தென்பெண்ணை ஆற்றில் தீர்த்தவாரி நடைபெறவில்லை. இதனால் அப்போது தென்பெண்ணை ஆற்றின் நீரை கொண்டுவந்து, அண்ணாமலையார் கோயிலிலேயே தீர்த்தவாரியை நிறைவேற்றினர். தற்போது, இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தென்பெண்ணை ஆற்று தீர்த்தவாரியில சுவாமி எழுந்தருள்வது குறிப்பிடத்தக்கது.

Tags : Anamalayar ,Dierwari , After 2 years today, Annamalaiyar Theerthawari in Tenpenna River: Devotees throng all the way for darshan.
× RELATED அண்ணாமலையார் கோயில் பெரிய நந்தியம்...