×

ராமஜெயம் படுகொலையில் 10 ஆண்டுகளாக நீடித்து வந்த மர்மம் உடைகிறது: 12 ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை

* முதல்நாள் பிரபல ரவுடி திண்டுக்கல் மோகன்ராம் உட்பட 4 பேரிடம் நடந்தது
* கேள்வி-பதில் வீடியோ காட்சிகளுடன் பதிவு n சிபிசிஐடி அதிகாரிகள் அதிரடி

சென்னை: தொழிலதிபர் ராமஜெயம் படுகொலையில், கடந்த 10 ஆண்டுகளாக நீடித்து வரும் மர்மத்துக்கு தீர்வு காணும் வகையில், 12 நபர்களிடம் நீதிமன்ற உத்தரவுப்படி உண்மை கண்டறியும் சோதனை நேற்று தொடங்கியது. முதல்கட்டமாக பிரபல ரவுடி திண்டுக்கல் மோகன்ராம் உட்பட 4 பேரிடம் நேற்று காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை சோதனை நடந்தது. சோதனையின்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு 4 பேர் அளித்த பதிலை வீடியோ காட்சிகளுடன் பதிவு செய்யப்பட்டது.

திருச்சியை சேர்ந்த தொழிலதிபர் மற்றும் ரியல் எஸ்டேட் அதிபரான ராமஜெயம். இவர், அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர். இந்நிலையில், ராமஜெயம் கடந்த 2012ம் ஆண்டு மார்ச் மாதம் வீட்டின் அருகே நடைபயிற்சி மேற்கொண்டபோது மர்மமான முறையில் காணாமல் போனார். இதையடுத்து போலீசாரின் தீவிர தேடலில், ராமஜெயம் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டும், சத்தம் போடாதபடி வாயை பிளாஸ்டிக் டேபால் சுற்றப்பட்டு மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து திருச்சி மாநகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியும் எந்த பலனும் ஏற்படவில்லை. அதேநேரம் கொலை நடந்தபோது அதிமுக ஆட்சி நடந்து வந்தது. பின்னர், இந்த கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இருந்தாலும் ராமஜெயத்தை யார் கொலை செய்தனர் என்ற சிறு தடயம் கூட கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறினர். பின்னர், இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. அவர்களும், தொழிலதிபர் ராமஜெயம் கொலை தொடர்பாக திருச்சியில் முகாமிட்டு விசாரணை நடத்தியும் கண்டுபிடிக்க முடியவில்லை. பிரபல தொழிலதிபர் ராமஜெயம் அதிகாலை வேளையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அதற்கு முன்பாக அவர் நடந்து சென்றதை பலர் பார்த்தும், திருச்சி போலீசார், சிபிசிஐடி மற்றும் சிபிஐ அதிகாரிகளால் கொலையாளிகளையும், அதற்கான காரணத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் ராமஜெயத்தின் இளைய சகோதரர் ரவிச்சந்திரன் தனது சகோதரர் ராமஜெயம் படுகொலை தொடர்பான விசாரணையில் இதுவரை எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. எனவே, ராமஜெயம் கொலை தொடர்பான விசாரணை மாநில அரசின் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கை விசாரணை நடத்திய உயர் நீதிமன்றம், தொழிலதிபர் ராமஜெயம் கொலை வழக்கை சிறப்பு அதிகாரி ஒருவரை நியமித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி, தொழிலதிபர் ராமஜெயம் கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணை நடத்த, நம்பவர் மாதம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் சிறப்பு அதிகாரியாக எஸ்பி ஜெயகுமார் நியமிக்கப்பட்டார். எஸ்பி ஜெயகுமார் தலைமையில் 40 பேர் கொண்டு சிபிசிஐடி போலீசார், தொழிலதிபர் ராமஜெயம் படுகொலை செய்யப்பட்ட பகுதியில் முகாமிட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், ராமஜெயத்தின் எதிரிகள் யாரேனும் உள்ளனரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டது. படுகொலை செய்யப்பட்டபோது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தி ஒரு வழியாக கூலிப்படையை சேர்ந்த 12 பேரை தங்கள் பிடியில் சிபிசிஐடி போலீசார் கொண்டு சென்றனர். 10 ஆண்டுகள் ராமஜெயம் கொலை வழக்கில் எந்த துப்பும் கிடைக்காமல் இருந்த நிலையில் எஸ்பி ஜெயகுமார் தலைமையிலான சிபிசிஐடி போலீசார் 12 பேர் மீது சந்தேகம் இருப்பதாக இறுதி முடிவுக்கு வந்துள்ளனர். அவர்களையும் பிடித்து விசாரணை நடத்தினர். இருந்தும், அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் வழக்கில் சற்று பின்னடைவு ஏற்பட்டது. இருந்தாலும், இறுதியாக 12 பேரிடம் ‘உண்மை கண்டறியும் சோதனை’ நடத்த வேண்டும் என்று நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்தனர்.

அதன்படி திருச்சி நீதிமன்றமும் சந்தேக நபர்களான பிரபல ரவுடிகள் 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி வழங்கியது. அதைதொடர்ந்து சிபிசிஐடி போலீசார், பிரபல ரவுடிகள் உட்பட 12 பேருக்கு சென்னையில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில ஆஜராகும்படி உத்தவிட்டனர். அதன்படி 12 பேரும் தங்களது வழக்கறிஞர்களுடன் நேற்று முன்தினம் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகினார்.பின்னர் 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவுப்படி மத்திய தடயவியல் துறை நிபுணர் மோசஸ் தலைமையில் 2 பேர் நேற்று முன்தினம் விமானம் மூலம் சென்னை வந்தனர். மயிலாப்பூரில் உள்ள தமிழ்நாடு தடயவியல் துறை தலைமை அலுவலகத்தில், மத்திய தடயவியல் துறை நிபுணர்கள் கொண்டு வந்த உண்மை கண்டறியும் சோதனைக்கு பொருத்தப்பட்டது.

அதன் பிறகு, முதல்கட்டமாக நேற்று காலை 10 மணிக்கு மயிலாப்பூரில் உள்ள தமிழ்நாடு தடயவியல் துறை தலைமை அலுவலகத்துக்கு தொழிலதிபர் ராமஜெயம் கொலையில் சந்தேகப்படும் பிரபல ரவுடிகளான திண்டுக்கல் மோகன்ராம், நரைமுடி கணேசன், திணேஷ், சீர்காழி சத்யா ஆகியோர் பலத்த பாதுகாப்புடன் எஸ்பி ஜெயகுமார் தலைமையில் அழைத்து வரப்பட்டனர். அப்போது 4 பேரின் வழக்கறிஞர்களும் அலுவலகத்துக்கு வந்தனர். அதைதொடர்ந்து திட்டமிட்டப்படி பிரபல ரவுடிகளான திண்டுக்கல் மோகன்ராம், நரைமுடி கணேசன், திணேஷ், சீர்காழி சத்யா ஆகியோரை தனித்தனியாக மோசஸ் தலைமையிலான குழுவினர் ‘உண்மை கண்டறியும் சோதனை’ நடத்தினர். 4 ரவுடிகளையும் தடயவியல் துறை நிபுணர்கள் ஒன்றின் பின் ஒருவராக தனித்தனியாக சோதனை நடத்தினர்.  

இந்த சோதனையின் போது, சிபிசிஐடி தயாரித்து வைத்திருந்த கேள்வி பட்டியலை வைத்து பதில் பெறப்பட்டது. அப்போது அவர்கள் அளித்த பதிலை வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. 4 நாட்கள் நடக்கும் இந்த சோதனையில் மீதமுள்ள 8 பேரில் இன்று 4 பேரிடம் நீதிமன்ற உத்தரவுப்படி உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகள் தொழிலதிபர் ராமஜெயம் படுகொலையில் எந்த தடயங்களும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் தற்போது 12 பேரிடம் சிபிசிஐடி போலீசார் நீதிமன்ற உத்தரவுப்படி உண்மை கண்டறிவும் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியே வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Tags : Ramajayam , Ramajayam Massacre, 10 Years, Mystery Breaks, 12 Raudi, Truth Finder, Trial
× RELATED கீழக்கானத்தில் ₹20 லட்சத்தில் துணை சுகாதார நிலைய கட்டிடம்