×

7 ஆண்டுகள் தலைமை காவலராக பணியாற்றியவர் சிறப்பு எஸ்ஐ பதவி உயர்வை கோர முடியாது: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஏழு ஆண்டுகள் தலைமை காவலராக பணியாற்றியவருக்கு, சிறப்பு எஸ்.ஐஆக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பெரம்பலூர் மாவட்டத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்த ராமசாமி என்பவர், 25 ஆண்டுகள் காவல் துறையில் பணியாற்றிய தனக்கு, சிறப்பு எஸ்.ஐ ஆக பதவி உயர்வு வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, தலைமை காவலர் ராமசாமிக்கு பதவி உயர்வு வழங்க உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசும், காவல் துறையும் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தன.அந்த மனுவில், 1979ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக பணி நியமனம் பெற்ற ராமசாமி 1997ம் ஆண்டு முதல் நிலை காவலராகவும், 2002ம் ஆண்டு தலைமைக் காவலராகவும் பணியாற்றி 2009ல் பணி ஓய்வு பெற்றுள்ளார் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் சத்திகுமார் சுகுமார குருப் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிறப்பு எஸ்.ஐ. பதவி உயர்வுக்கு 10 ஆண்டுகள் தலைமைக் காவலராக பணி புரிந்திருக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற முழு அமர்வு உத்தரவிட்டுள்ளது. ஏழு ஆண்டுகள் மட்டுமே தலைமைக் காவலராக பணியாற்றிய மனுதாரருக்கு பதவி உயர்வு பெற உரிமையில்லை. எனவே, அவருக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று தீர்ப்பளித்தனர்.


Tags : guard ,Chennai High Court , 7 Years, Head Constable, Special SI, Post , Not Claimable, Madras High Court, Ord
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...