×

 ராமஜெயம் கொலை வழக்கு 13 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை: சென்னையில் இன்று நடக்கிறது

திருச்சி: ராம ஜெயம் கொலை வழக்கில் சந்தேகத்துக்குரிய 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை சென்னையில் இன்று முதல் 6 நாள் நடக்க உள்ளது. தமிழ்நாடு அமைச்சர் கே.என்.நேருவின் தம்பிராமஜெயம் கடந்த 2012 மார்ச் 29ம் தேதி கடத்தப்பட்டு மர்மநபர்களால் கொல்லப்பட்டார். இந்த வழக்கு விசாரணை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. எஸ்.பி. ஜெயகுமார் தலைமையில், 40 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராமஜெயம் கொலை பாணியில் தமிழகத்தில் நடந்த பல்வேறு கொலை சம்பவங்களில் ஈடுபட்ட ரவுடிகள் மற்றும் அந்த சமயம் திருச்சியில் முகாமிட்டிருந்த ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

அதில் திண்டுக்கல் மோகன் ராம், நரைமுடி கணேசன் உட்பட 13 பேர் இருந்தனர். இவர்களிடம் உண்மையை கண்டறியும் சோதனை நடத்த திருச்சி நீதிமன்றம் கடந்த மாதம் அனுமதித்தது. இந்நிலையில் 13 பேரிடமும் இன்று (17ம்தேதி) முதல் 22ம் தேதி வரை சென்னையில் உள்ள தடயவியல் துறை அலுவலகத்தில் நிபுணர்களின் முன்னிலையில் உண்மையை கண்டறியும் பரிசோதனை நடத்தப்படும் என சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இது குறித்து போலீஸ் வட்டாரங்களில் கூறுகையில், நிச்சயம் குற்றவாளி குறித்த அறிவியல் ரீதியான முடிவுகள் தெரியவரும். பரிசோதனை அறிக்கை இந்த மாத இறுதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றனர்.

Tags : Ramajayam ,Chennai , Ramajayam murder case: Fact-finding test for 13 persons: Today in Chennai
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...