நன்றி குங்குமம் தோழி
பெண்களுக்கு அடிக்கடி ஏற்படக்கூடிய தொற்று நோய்களில், சிறுநீர் பாதை தொற்று நோய், உடலில் இரண்டாவது மிகவும் பொதுவான தொற்று நோய் வகைகளில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான மக்களை பாதிக்கும் கடுமையான உடல்நல பிரச்சனையாகவும் இது உள்ளது.
சிறுநீரகங்கள், சிறுநீர்க்குழாய்கள் (சிறுநீரகத்தையும் சிறுநீர்ப்பையையும் இணைக்கும் குழாய்கள்), சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர் தாரை (உடலின் வெளிப்புறத்துடன் சிறுநீர்ப்பையை இணைக்கும் குழாய் ஆகிய உறுப்புகளை உள்ளடக்கியது சிறுநீர் மண்டலம்.) இவற்றில் வரக்கூடிய நோய் தொற்றுகளை உள்ளடக்கியது சிறுநீர் பாதை நோய்த்தொற்று. உடலில் இருந்து சிறுநீரை உருவாக்கி அவற்றை வெளியேற்றும் உறுப்புகள்தான் இவை.
சிறுநீர் அமைப்பில் உள்ள உறுப்புகள் உடலில் இருந்து கழிவுகளை அகற்றவும், ரத்த அளவு மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் வளர்சிதை மாற்றங்களின் அளவைக் கட்டுப்படுத்தவும், ரத்த pHஐக் கட்டுப்படுத்தவும் இணைந்து செயல்படுகின்றன. பொதுவாக, சிறுநீரில் நமது உடலின் வளர்சிதை மாற்றத்தின் கழிவுகளான உப்புகள், நச்சுகள் மற்றும் நீர் ஆகியவை இருக்கின்றன. சிறுநீரானது நமது உடலில் நடக்கும் மாற்றங்களின் ஒரு சிறந்த குறிகாட்டியாகும், உதாரணமாக காயம், தொற்று அல்லது வீக்கம் ஏற்படும் போது, சிறுநீரில் ரத்தம், புரதம் அல்லது வெள்ளை ரத்த அணுக்கள் இருக்கலாம். சிறுநீரில் குளுக்கோஸ் இருப்பது நீரிழிவு நோயின் அறிகுறியாக இருக்கலாம்.
நன்றாக செயல்படும் சிறுநீர்ப்பாதை நமது ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் இன்றியமையாதது. ஆனால் சிறுநீர் பாதை சரியாக செயல்படாதபோது, விரும்பத்தகாத அறிகுறிகளை நாம் அனுபவிக்கலாம். சிறுநீர் பாதையில் வரும் நோய்களில் முதன்மையாகக் கருதப்படுவது சிறுநீர் பாதை நோய்த் தொற்று. இது, நோய்க்கிருமிகளாலும், நுண்ணுயிர்களாலும் ஏற்படுகிறது. இவை, சிறுநீர் பாதையின் எந்த பகுதியையும் பாதிக்கலாம். இதில் மிகவும் பொதுவான வகை சிறுநீர்ப்பை அழற்சி (Cystitis), மற்றொன்று நுண்குழலழற்சி (pyelonephritis). இது மிகவும் தீவிரமானதாகும். இந்த சிறுநீர் நோய்த் தொற்று, ஆண்கள், குழந்தைகள், வயதானவர்கள் என அனைவரையும் பாதிக்கிறது.
குறிப்பாக, சுமார் ஐந்தில் ஒரு பெண், ஒருமுறையாவது இந்த சிறுநீர் பாதை நோய்த் தொற்றினால் பாதிக்கப்படுகிறார்கள். பெரும்பாலும் இந்நோய் பெண்களை அதிக அளவில் பாதிக்கிறது. இது ஆண்களுக்கு ஏற்படும் போது மிகவும் தீவிரமாக இருக்கும். இருப்பினும் ஆண்களில் சிறுநீர் பாதை நோய் தொற்று பெண்களைப்போல் பொதுவானவை இல்லை. பிராஸ்திரேட் வீக்கம் உள்ள ஆண்களுக்கும், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் சிறுநீர் நோய் தோற்றுக்கள் அதிகமாக வர வாய்ப்புள்ளது என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.
சிறுநீர் பாதை நோய்த் தொற்று மிகவும் கவலை அளிக்கும் ஒன்றாக மாறக்கூடும் எனவே கவனமாக இருக்க வேண்டும். அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்து, ஆனால் ஒவ்வொரு முறையும் சிறுநீர் சிறிய அளவே வெளியேறும் போது சிறுநீர் பாதை நோய் தொற்று இருப்பதாக சந்தேகிக்கலாம். பல நேரங்களில் இது எரிச்சல் மற்றும் வலியுடன் சேர்ந்து இருக்கும். சில சமயங்களில் வயிற்றுப் பகுதியிலும் வலி வரக்கூடும். இந்தத் தொற்று சிறுநீரகங்களுக்கு பரவியிருந்தால் விலா பகுதியில் மற்றும் முதுகில் வலி ஏற்படலாம். சிறுநீர் பாதை நோய் தொற்று பல நேரங்களில் குளிர் காய்ச்சலாக கூட வெளிப்படலாம். இந்த காய்ச்சலானது மாலை நேரங்களில் வரத்தொடங்கும்.
சிறுநீர் பை (Bladder Infection) தொற்றுகளுக்கான அறிகுறிகள்
*சிறுநீர் முழுமை அடையாமல் வெளியேற்றுவதுடன் அடிக்கடி சிறுநீர் கழித்தல்.
*இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம்.
*சிறுநீர்க்குழாய் துவாரத்தில் அசௌகரியம் அல்லது வலி.
*சிறுநீர் கழிக்கும்போது சிறுநீர் குழாய் முழுவதும் எரியும் உணர்வு.
*சிறுநீரில் அல்லது சிறுநீர் குழாயில் இருந்து சீழ் வெளியேறுதல்.
*சிறுநீரில் ரத்தம்.
*லேசான காய்ச்சல்.
*துர்நாற்றத்துடன் கலங்கலான சிறுநீர் வெளியேறுதல்.
சிறுநீரகத்தில் (Infection in kidneys) தொற்று இருந்தால்
*மேலே உள்ள அனைத்து அறிகுறிகளும் இருக்கும், மற்றும் வாந்தி, நலிவான உடல்நிலை, அசதி மற்றும் பொதுவாக நோயுற்ற உணர்வு.
*முதுகு மற்றும் இடுப்பு வலி.
*வயிற்றில் வலி அல்லது அழுத்தம்.
*நடுங்கும் குளிர் மற்றும் அதிக காய்ச்சல்.
*இரவில் வியர்வை.
*தீவிர சோர்வு.
சிறுநீர் பாதை நோய் தொற்றுடன் தொடர்புடைய பிற அறிகுறிகள் பின்வருமாறு
*ஆண்குறி வலி.
*உடலுறவின் போது வலி.
*பக்கவாட்டு வலி.
*மனதில் மாற்றங்கள் அல்லது குழப்பம்.
சிறுநீர் பாதை நோய் தொற்றுகளின் காரணங்கள்
*பெண்கள் கழிவறையை பயன்படுத்திய பிறகு முன்னிருந்து பின் பக்கம் கழுவ வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுவதற்கு காரணம் சிறுநீர் பாதை நோய் தொற்று வந்துவிடக் கூடாது என்பதுதான்.
*சிறுநீர் கழிக்கும் குழாய் பெண்களுக்கு ஆசனவாய் அருகில் உள்ளதால் சிறுநீர் பாதை நோய் தொற்றுகள் பெண்களில் அதிகமாக காணப்படுகிறது.
*பெரிய குடலில் இருந்து வரும் கிருமிகள் சில சமயங்களில் ஆசன வாயில் இருந்து வெளியேறி சிறுநீர் குழாய்க்கு வரலாம், அங்கிருந்து அவை சிறு நீர்ப்பை வரை பயணிக்கலாம், மேலும் நோய் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் அது சிறுநீரகத்தையே பாதிக்கலாம்.
*ஆண்களை விட பெண்களுக்கு சிறுநீர் குழாய் சிறிதாக இருக்கும் என்பதால் கிருமிகள் சிறுநீர்ப் பைகளுக்கு செல்வதை எளிதாக்குகிறது.
*உடலுறவு கொள்வது சிறுநீர் பாதையில் பாக்டீரியாவை அறிமுகப்படுத்தலாம்.
*சில பெண்களுக்கு அவர்களின் மரபணுக்கள் காரணமாக சிறுநீர் பாதை நோய்த் தொற்றுகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
*நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெண்களில் சிறுநீர் பாதை நோய்த் தொற்று அதிகமாக காணப்படுகிறது. அவர்களின் பலவீனமான நோய் எதிர்ப்பு அமைப்பால் நோய்த் தொற்றுகளை எதிர்த்துப் போராடுவது கடினமாகிறது.
*ஹார்மோன் மாற்றங்கள்.
*சிறுநீரக கற்கள்.
*பக்கவாதம் மற்றும் முதுகுத்தண்டு காயம்.
*புற்றுநோய் அல்லது எச்.ஐ.வி காரணமாக ஒருவருக்கு பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும்போது சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் வரலாம்.
ஆயுர்வேதத்தில் சிறுநீர் பாதை நோய்த் தொற்று
ஆயுர்வேதத்தில் சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்றுகள் முக்கியமாக உடலில் பித்த தோஷத்தின் ஏற்றத்தாழ்வு காரணமாக வருவதாக கருதப்படுகிறது. அதிக சூடான, காரமான மற்றும் புளிப்பான உணவுகளை உண்பது, மது அருந்துதல், சிறுநீர் கழிப்பதை அடக்குவது, சிறுநீரை அதிக நேரம் தேக்கி வைத்தல், அதிக வெப்பம், போதுமான தண்ணீர் குடிக்காதது, நச்சுக்கள் மற்றும் ரசாயனம் கலந்த உணவு ஆகியவை காரணங்களாக கூறப்படுகிறது.
ஆயுர்வேதத்தில் சிறுநீர் பாதை நோய்த் தொற்று மூத்திரகிருச்சிரம் என்ற அத்யாயத்தின் கீழ் விவாதிக்கப்படுகின்றது.
சிறுநீர்ப்பாதை நோய்த் தொற்றுக்கான சிகிச்சை முறைகள்
சிறுநீர் பாதை கோளாறுகளுக்கான ஆயுர்வேத சிகிச்சையானது நச்சு நீக்குவது, தொற்று நோயை வெளியேற்றுவது, சிறுநீர்ப்பாதையின் அடைப்புகளை சுத்தம் செய்வது, இவை மட்டுமில்லாமல் அபான வாயுவின் செயல்பாட்டை சரி செய்து சிறுநீர் மண்டலத்தின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச்செய்யும் மருத்துவமுறைகளை வழங்குவதேயாகும்.ஆயுர்வேத சிகிச்சை முறை தீங்குவிளைவிக்கும் பாக்டீரியாவை எந்த பக்க விளைவுகள் இல்லாமல் குறைக்கவும், சாதாரண PH அளவை பராமரிக்கவும் உதவுகிறது.
சிறுநீர் பாதை நோய்த் தொற்றுகளுக்கு பொதுவாக ஆன்டிபயாட்டிக் சிகிச்சை (Antibiotic treatment) ஆங்கில மருத்துவத்தில் அளிக்கப்படுகிறது. இது கிருமிகளை அழிக்குமே தவிர நோயெதிர்ப்பு சக்தியை எந்த விதத்திலும் அதிகப்படுத்தாது. ஆகவே அடிக்கடி இந்த தொற்றுகள் மீண்டும் மீண்டும் வர வாய்ப்புள்ளது. மேலும் நீண்டகால ஆன்டிபயாட்டிக் பயன்பாடு செரிமானக்கோளாறு, வாய் புண்கள், சிறுநீரக பாதிப்பு, நீரிழிவு நோய், மூச்சுத் திணறல் மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி போன்ற பல உடல் நல பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும், இதற்கு மாறாக ஆயுர்வேதம் பாதுகாப்பான மற்றும் பயனுள்ள சிகிச்சையாக இருக்கிறது.
சிறுநீர் பாதை நோய்த்தொற்றை கட்டுப்படுத்த வாழ்க்கை முறை மாற்றங்கள்
*சூடான காரமான எண்ணெய் உணவுகளை குறைக்க வேண்டும்.
*நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
*உணவில் அந்தந்த பருவகாலத்தில் கிடைக்கும் பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
*தூய்மையான கழிப்பிடங்களை பயன்படுத்துவது நல்லது.
*வீட்டினுள் உள்ள கழிப்பிடங்களை சுத்தமாகவும் காற்றோட்டமுள்ளதாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.
*உள்ளாடைகளை தினமும் நன்றாக துவைத்து, வெயிலில் உலர்த்தி பயன்படுத்த வேண்டும்.
*ஒவ்வொரு முறை சிறுநீர் கழித்த பின்பும் அவ்விடத்தை நன்றாக நீர் விட்டு கழுவி விட்டு பின் ஒரு காய்ந்த துண்டில் துடைத்து பின் ஆடைகளை அணிய வேண்டும்.
*கோமுகாசனம், பவனமுக்தாசனம், விபரீதகரணி முத்ரா, மூலபந்தம் மற்றும் பிராணாயாமம் போன்ற யோகாசனங்கள் இடுப்புத் தசைகளை (pelvic floor muscles) வலுப்படுத்தி, சிறுநீர் பாதை நோய்த் தொற்றை கட்டுப்படுத்த உதவியாக இருக்கும்.
*சிறுநீர் பாதை நோய் தொற்று அறிகுறிகளை குறைக்க சீரக தண்ணீர் மற்றும் கருப்பு திராட்சை நீரை பயன்படுத்தலாம்.
*இளநீரில் மஞ்சள் சேர்த்து குடிக்க லேசாக வரும் நோய் தொற்றுக்கள் எளிதாக குறையும்.
*பார்லி நீர், வாழைத்தண்டு, வெள்ளரிக்காய் மற்றும் நீர்காய்கள் சிறுநீரைப் பெருக்கி கிருமிகளை வெளியேற்றும்.
*சிறுநீர், மலத்தினை அடக்கக்கூடாது.
*தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சி செய்த பிறகு குளித்துவிட்டு பிறப்புறுப்பு பகுதியை நன்றாக துடைக்க வேண்டும்.
*உடலுறவுக்கு முன்னும் பின்னும் சிறுநீர் கழிக்க வேண்டும்.
*இடுப்பு தசைகளை வலுப்படுத்த கெகல் (Kegel exercise) பயிற்சிகளைச் செய்யலாம்.
*சர்க்கரை வியாதி உள்ளவர்கள் தங்களது ரத்த சர்க்கரையின் அளவினை நன்றாக கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
சிறுநீர்ப்பாதை நோய்த் தொற்றுக்கான ஆயுர்வேத சிகிச்சைகள்நெருஞ்சில், நெல்லிக்காய், மூக்கரட்டைக்கொடி, கண்டங்கத்திரி, மாவிலங்கம், சீந்தில்கொடி, தண்ணீர்விட்டான் கிழங்கு, அதிமதுரம், சந்தனம் ஆகிய மூலிகைகள் சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்றுக்களை எதிர்க்கும் ஆயுர்வேத மூலிகைகளாகும்.
பிரகத்யாதி கஷாயம், கோக்சூராதி கஷாயம், வாரணாதி கஷாயம், புனர்னவாதி கஷாயம், ஹரிதகியாதி கஷாயம், திக்தகம் கஷாயம், கோக்சூராதி குக்குலு, சந்திரபிரபாவட்டி, சந்தனாசவம், புனர்னவாரிஷ்டம், நிஷா ஆமலகி சூரணம், அப்ரக பஸ்மம் ஆகிய ஆயுர்வேத மருந்துகள் தக்க ஆயுர்வேத மருத்துவரின் அறிவுரைப்படி எடுத்துக்கொள்ள சிறுநீர் பாதை நோய்த் தொற்றுக்கள் முற்றிலுமாக குணமாவதுடன் சிறுநீர் மண்டலத்தின் நோயெதிர்ப்பு சக்தியையும் உயர்த்துகிறது.
தொகுப்பு: உஷா நாராயணன்
