×

அய்யலூர் சந்தையில் நேற்று ஒரே நாளில் ரூ.2 கோடி ஆடு, கோழிகள் விற்பனை: தூள் பறக்குது பொங்கல் கொண்டாட்டம்

அய்யலூர்: பொங்கலையொட்டி அய்யலூர் ஆட்டுச்சந்தையில் நேற்று ஒரே நாளில் ரூ.2 கோடிக்கு ஆடு, கோழிகள் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே அய்யலூரில் வியாழக்கிழமைதோறும் ஆட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது. எரியோடு, அய்யலூர், வடமதுரை, புத்தூர், நடுப்பட்டி, கல்பட்டி சத்திரம், கோம்பை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து கால்நடை வளர்ப்போர் ஆடு, கோழி மற்றும் விவசாயிகள், காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இவற்றை உள்ளூர் மட்டுமின்றி வெளியூரில் இருந்து வரும் வியாபாரிகள் வாங்கி செல்வர். கடந்த 3 மாதங்களாக குறைந்தளவே வியாபாரிகள் வந்திருந்ததால் அய்யலூர் ஆட்டுச்சந்தை களையிழந்தே காணப்பட்டது.

மேலும் ஆடு, கோழிக்கு விலை கிடைக்காததால் கால்நடை வளர்ப்போர் சிரமம் அடைந்தனர். தற்போது பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் நேற்று நடந்த அய்யலூர் ஆட்டுச்சந்தை, அதிகாலை 3 மணியில் இருந்தே களைகட்டியது. திண்டுக்கல், தேனி, திருச்சி, மதுரை, கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்திருந்தனர். 10 கிலோ கொண்ட வெள்ளாடு ரூ.8 ஆயிரம், சிறிய குட்டிகள் ரூ.3 ஆயிரம் வரை விற்பனையானது. பொங்கல் பண்டிகையின்போது அய்யலூர், வடமதுரை, எரியோடு பகுதி கிராமங்களில் கட்டுச்சேவல் சண்டை அதிக அளவில் நடைபெறும். இதற்காக கட்டுச்சேவல்கள் வாங்க ஏராளமான இளைஞர்கள் குவிந்தனர்.

ஒரு கட்டுச்சேவல் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்பனையானது. நாட்டுக்கோழி ஒரு கிலோ ரூ.380 முதல் ரூ.400 வரை விலை கேட்கப்பட்டது. அய்யலூர் ஆட்டுச்சந்தையில் நேற்று ஒரு நாள் மட்டும் சுமார் ரூ.2 கோடி வரை வர்த்தகம் நடைபெற்றதாகவும், ஆனாலும் இது கடந்த ஆண்டை காட்டிலும் குறைவு என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

அலங்கார பொருள் விற்பனையும் ஜரூர்
அய்யலூர் ஆட்டுச்சந்தையில் நேற்று மதியத்துக்கு மேல் மாட்டு பொங்கலையொட்டி, மாடுகளை அலங்காரம் செய்ய கலர் பொடிகள், திருஷ்டி, சலங்கை கயிறுகள், கோல மாவுகள் விற்பனை அதிகரித்தது. மேலும் விவசாயிகள் தங்கள் முன்னோர் நினைவாக வீடு மற்றும் நிலங்களில் சமாது பொங்கல் கொண்டாடுவர். இதற்கான பூஜை பொருட்கள், பொங்கல் சாமான்கள் விற்பனையும் களை கட்டியது.

Tags : Ayyalur market , Rs 2 Crore goats, chickens sold in Ayyalur market in one day yesterday: Pongal celebration by flying powder
× RELATED சொந்த ஊர்களுக்கு 16லட்சம் பேர் பயணம்;...