×

நெல்லை டவுனில் கடும் போக்குவரத்து நெரிசல்; பொங்கல் பண்டிகை பொருட்கள் வாங்க அலைமோதும் கூட்டம்: தலைப் பொங்கல் சீர் வாங்குவதற்காக குவிந்தனர்

நெல்லை: தைப்பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் (15ம் தேதி) கொண்டாடப்படும் நிலையில்  தலைப்பொங்கல் கொண்டாடும் தம்பதிகளுக்கு காய்கறிகள் வாங்குவதற்காக  அதிகாலையிலேயே மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் நெல்லை டவுனில் கடும் போக்குவரத்து நெரிசல்  ஏற்பட்டது. தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகை நாளை மறுதினம் 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. உழவர்களுக்கு நன்றி சொல்லும் திருநாளான இந்த பண்டிகையின் போது அனைத்து காய்கறிகளும் படைத்து புத்தாடை உடுத்தி குடும்பத்தினர் அனைவரும் ஒன்று கூடி பொங்கல் வைத்து கொண்டாடுவது மரபாக உள்ளது. பொங்கல்  பண்டிகைக்கு 2 நாட்களே உள்ள நிலையில் பொங்கல் பண்டிகைக்கான பொருட்கள் விற்பனையால் சந்தைகளில் கூட்டம் அலைமோதுகிறது.

குறிப்பாக தலைப்பொங்கல் கொண்டாடும் புதுமணத் தம்பதிகளுக்கு பொங்கல் சீர்வரிசை  பொருட்கள் வழங்குவதற்காக பொதுமக்கள் கடந்த 2 தினங்களாக வாகனங்களுடன் சந்தைகளுக்கு திரண்டு வந்த வண்ணம் உள்ளனர். கரும்பு  கட்டுகள். பனங்கிழங்கு, மஞ்சள் குலை மற்றும் வகை, வகையான காய்கறிகள், கிழங்கு வகைகள், பித்தனை பாத்திரங்களை வாங்கி வாகனங்களில் ஏற்றிக் கொண்டு செல்கின்றனர். இதனால் சந்தைப்பகுதிகளில் மக்கள் கூட்டமும் வாகனங்களின் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்துள்ளது. நெல்லை டவுன் நயினார்குளம் பகுதியில் உள்ள மொத்த  காய்கறி விற்பனை சந்தை இரவில் மட்டுமே இயங்கும். இங்கு வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான லாரி, வாகனங்களில் காய்கறிகள் வந்து இறங்குவது வழக்கம். இங்கிருந்து கேரளா மற்றும்  தென் மாவட்டங்களுக்கு காய்கறிகள் கொண்டு செல்லப்படுகின்றன.

இதனால் இரவு  நேரங்களில் விடிய, விடிய இந்த சந்தை கலகலப்பாக இயங்கும். தற்போது பொங்கல்  பண்டிகைக்காக இங்கு வரும் காய்கறி வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து  வருகிறது. கேரட், பீன்ஸ், பீட்ருட் போன்ற மலை காய்கறிகள், வெளி மாநிலங்களில் இருந்து வரும் பல்லாரி உள்ளிட்ட காய்கறிகள் லாரிகளில் கொண்டு வந்து சந்தைகளில் குவிக்கப்படுகின்றன. மேலும் சிறு கிழங்கு, கருணைக்கிழங்கு, உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு போன்ற கிழங்கு வகைகளும் மூடை, மூடையாக வந்து குவிந்த வண்ணம் உள்ளன. தலைப் பொங்கல் சீர் கொடுப்ோர் தங்கள் வசதிக்கு தகுந்தவாறு 2 கிலோ முதல் 5 கிலோ வரை ஒவ்வொரு காய்கறி ரகங்களையும் கொள்முதல் செய்கின்றனர்.

இதனால் பொங்கலுக்காக உள்ளூர்,  வெளியூர் மொத்த வியாபாரிகளும், பொதுமக்களும் அதிகளவில் வந்து குவிகின்றனர். தற்போது பகலிலும் மக்கள்  கூட்டம் இந்த சந்தையில் அலைமோதுகிறது. கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் மக்கள் திரண்டு வந்து காய்கறிகளை மூடை, மூடையாக  வாங்கிச்சென்ற வண்ணம் உள்ளனர். இதனால்  இந்தபகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கத்தரி,  முருங்கை, மாங்காய் போன்ற சில காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. பொங்கல் பண்டிகை காய்கறி வாங்குவதற்காக நேற்று மகாராஜநகர் உழவர் சந்தையில் கூட்டம் நிரம்பி வழிந்தது. கார், பைக்குகள் அதிகம் நிறுத்தப்பட்டிருந்ததால் அந்த வழியாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால் வாகன ஓட்டிகள் மாற்று வழியில் பயணித்தனர். இதுபோல் நெல்லை டவுன் ரதவீதி பகுதிகளிலும், பாளை உழவர்சந்தை,  காந்தி மார்க்கெட், மேலப்பாளையம் உழவர் சந்தை பகுதிகளிலும் காய்கறி விற்பனை  சூடுபிடித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலும் பொங்கல் விற்பனை களைகட்டியுள்ளது. காய்கறிகளின் வரத்து அதிகமாக இருந்தபோதும் விலை அதிகமாகவே இருக்கிறது. காய்கறிகளின் விலை இன்னும் உயரும் என்று கூறப்படுகிறது. 15 எண்ணம் கரும்புகளை கொண்ட கட்டுக்கரும்பு ரூ.400 வீதம் விற்பனையானது. பொங்கல் பானை ரூ.150 வீதமும், அடுப்பு ரூ.160 வீதமும், கலர் அடுப்பு கட்டியானது ரூ.150 முதல் 350 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கடந்த இருநாட்களாக அறுவடை செய்யப்பட்டு தூத்துக்குடி பகுதிக்கு கொண்டு வரப்பட்டுள்ள மஞ்சள் குலைகள் விற்பனையும் சூடுபிடித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் வாழைத்தார் விளைச்சல் குறைந்து இருப்பதால் வரத்து குறைந்துள்ளது. பெரும்பாலும் சத்தியமங்கலம் உள்ளிட்ட இடங்களில் இருந்தும், ஆந்திரா மாநிலத்தில் இருந்தும் வாழைத்தார்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருந்தன. வாழைத்தார் வரத்து குறைந்ததால் விலை அதிகரித்து காணப்பட்டது. பொங்கல் பூ எனப்படும் கண்ணுப்பிள்ளை பூ விற்பனையும் பரபரப்பாக நடந்து வருகிறது.

பொங்கலுக்குத் தேவையான புத்தாடை, பொங்கல்படி பொருட்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் நேற்றே வாங்கத்துவங்கினர். இதனால் காய்கறி மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. தூத்துக்குடியில் பொங்கல் பொருட்கள் விற்பனையால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில் தூத்துக்குடி மாநகரின் முக்கிய பகுதிகளில் மக்கள் கூட்டத்தால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.


Tags : Nellie Town ,Pongal ,Thalai Pongal , Heavy traffic jam in Nellie Town; Crowds flock to buy Pongal festival items: People throng to buy Thalai Pongal saree
× RELATED கரும்பு நடவில் விவசாயிகள் ஆர்வம்