×

கத்திரி வெயிலில் சுருண்டு விழுந்து பெண் பலி

சென்னை: பள்ளிப்பட்டு அருகே மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண் கத்திரி வெயிலுக்கு சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, பள்ளிப்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் கோடை வெயில் சுட்டெரித்து வருகின்றது. கடந்த ஒரு மாதமாக வெயில் சதத்தை கடந்து கொளுத்தி வரும் நிலையில் கடந்த சில நாட்களாக அதிகபட்சமாக 109 டிகிரி பதிவானது. மேலும் அனல் காற்று வீசுவதால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.

இந்நிலையில் கோடை வெயிலின் உச்சகட்டமாக அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் கடந்த 4ம் தேதி தொடங்கியது. பள்ளிப்பட்டு அருகே பொதட்டூர்பேட்டை பேரூராட்சி சவுட்டூரை சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மனைவி வரலட்சுமி (46) வழக்கம்போல் நேற்று முன்தினம் காலை மாடு மேய்க்க சென்றுள்ளார். மதியம் 12 மணியளவில் உச்சி வெயிலில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது, அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது அவரை அருகில் இருந்தவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு பரிதாபமாக இறந்தார்.

இது தொடர்பாக பொதட்டூர்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண், கத்திரி வெயிலுக்கு சுருண்டு விழுந்து இறந்தது சோகத்தை ஏற்படுத்தியது.

The post கத்திரி வெயிலில் சுருண்டு விழுந்து பெண் பலி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Thiruthani, Thiruvallur district ,Katri ,
× RELATED தமிழகத்தில் இன்று தொடங்குகிறது அக்னி...