சத்தியமங்கலம் வழியாக கோவைக்கு சென்றபோது பஸ் கண்ணாடியை சுக்குநூறாக்கிய யானை

சத்தியமங்கலம்: ஆசனூர் அருகே அரசு பஸ்சை வழிமறித்த காட்டு யானை கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு நிலவியது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக அமைந்துள்ள சாலைகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் காட்டு யானைகளின் நடமாட்டம் தற்போது அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் மாலை கர்நாடக மாநிலம் கொள்ளேகாலில் இருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிய அரசு பஸ் சத்தியமங்கலம் செல்வதற்காக கொள்ளேகால்-சத்தியமங்கலம் சாலையில் கேர்மாளம் வனப்பகுதி வழியாக கோவைக்கு சென்று கொண்டிருந்தது. கெத்தேசால் அருகே சென்றபோது சாலையில் காட்டு யானை நடமாடுவதை கண்ட ஓட்டுனர் பஸ்சை நிறுத்தினார். அப்போது பஸ்சின் அருகே வந்த யானை திடீரென ஆக்ரோஷத்துடன் தனது தும்பிக்கையால் பஸ்சின் முன்பக்க கண்ணாடியை தும்பிக்கையால் தாக்கியது. இதில் கண்ணாடி முழுவதும் உடைந்து நொறுங்கி சேதம் அடைந்தது. பஸ்சில் இருந்த பயணிகள் பயத்தில் அலறினர். அவ்வழியே வந்த வாகனங்கள் ஹாரன் சத்தம் எழுப்பியதால் காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்றது.

Related Stories: