×

ராயக்கோட்டை போலீஸ் ஸ்டேசன் முன்பு கம்பீரமாக காட்சியளிக்கும் ஆங்கிலேயர் காலத்து பீரங்கி-வரலாற்று தகவல்களுக்கு சாட்சி

ராயக்கோட்டை  கிருஷ்ணகிாி மாவட்டம், ராயக்கோட்டை போலீஸ் ஸ்டேசன் முன்பு வைக்கப்பட்டுள்ள பீரங்கி இன்றளவும் கம்பீரமாக காட்சியளிக்கிறது. திப்பு சுல்தானுக்கு எதிராக ஆங்கிலேயர் பயன்படுத்திய பீரங்கி, பல வரலாற்று தகவல்களை தன்னுள் புதைத்துள்ளது.  மைசூர் சாம்ராஜியத்திற்கும், ராயக்கோட்டைக்கும் ஜெகதேவராயர் ஆட்சி காலத்திலிருந்தே நெருங்கிய தொடர்பு இருந்து வந்துள்ளது. சென்னை பட்டணம் பாதித்தால், அதன் தாக்கம் ராயக்கோட்டையிலும் எதிரொலிக்கும். நான்கு கட்டமாக நடந்த மைசூர் போர், கி.பி.1767 முதல் 1800 வரை நடைபெற்றுள்ளது. முதல் இரண்டு மைசூர் போாில் ராயக்கோட்டைக்கு பாதிப்பு அதிகப்படியாக இல்லை. ஆனால் 3ம் மைசூர் போர் முழுக்க, முழுக்க ராயக்கோட்டையை மையமாக கொண்டு தான் நடைபெற்றுள்ளது.

இந்த போர் திப்புசுல்தானுக்கும், மேஜர் கௌடிக்கும் நடந்த போர் ஆகும். இரண்டாம் மைசூர் போர் நடந்த போது திப்புவின் தந்தை ஐதர்அலி, நோய்வாய்பட்டு இறந்துவிட்டார். அதன்பிறகு திப்புசுல்தான் ராயக்கோட்டையை தலைமை இடமாக வைத்து, தமிழக பகுதிகளை கைப்பற்றி, ஆட்சியை தொடர்ந்துள்ளார். மூன்றாம் மைசூர் போர் 1790 ஏப்ரல் மாதம் ஆரம்பமானது. திப்புசுல்தானை அழிக்க ஆங்கிலேயர், மராட்டியர், நிஜாம் ஆகிய மூவரும் கைகோர்த்தனர்.

மேற்கு பகுதியிலிருந்து மேஜர் கௌடியின் படைகள் முன்னேறி வந்தது. தகவல் அறிந்ததும் திப்புசுல்தான் தன் படைகளை தரைக்கோட்டையிலும், மலைக்கோட்டையிலும் தயார் நிலையில் வைத்திருந்தார். மேஜர் கௌடியின் தலைமையில் பீரங்கிகள், படை வீரர்கள் என 800 பேர் கொண்ட ஒரு பிாிகேட், ஜெக்கோியில் உள்ள ஆலமரத்தின் அடியில் இரவோடு, இரவாக கொண்டுவந்து நிறுத்தப்பட்டது. சூாிய உதயத்திற்குள் கீழ்கோட்டையை கைப்பற்ற வேண்டும் என்று, கிழக்கிந்திய கம்பெனி உத்தரவிட்டது.

அன்று இரவு தரைகோட்டையில் உள்ள வடக்கு பக்க நுழைவாயிலின் கதவுகளை, வெடி வைத்து தகர்த்தினர். அப்போது திப்புசுல்தான் படைகள் தரைக்கோட்டையை காக்க கடுமையான பீரங்கி தாக்குதல் நடத்தியது. இதில் தரைக்கோட்டை மேஜர் கௌடி வசமானது. அதற்கு காரணம் ராயக்கோட்டையின் மலைக்கோட்டையில் இருந்து தரைக்கோட்டையை நோக்கி தாக்குதல் நடத்தும் அளவிற்கு பீரங்கி வைப்பு அமைப்புகள் 7 மட்டுமே இருந்தது. தரைக்கோட்டையை பிடிப்பதற்கு அதுவும் ஒரு காரணம். அதனால் ஆங்கிலேயர்களுக்கு பலம் கூடியது.

ராயக்கோட்டையில் நடைபெற்ற போாில் தனக்கு ஏற்பட்ட தோல்வியை திப்புசுல்தான் பெருத்த அவமானமாக கருதினார். அதனால், தனது ஆளுகைக்கு உட்பட்ட தமிழக பகுதிகள் அனைத்தையும் விட்டு, மைசூர் ஸ்ரீரங்கப்பட்டணம் சென்றார். ராயக்கோட்டை பிடிப்பட்டதோடு, மூன்றாம் மைசூர் போர் முடிவடைந்தது. பின்னர் முழுக்க, முழுக்க 1797ல் கிழக்கிந்திய கம்பெனியின் வசம் ராயக்கோட்டை கொண்டுவரப்பட்டது.

ராயக்கோட்டையில் பீரங்கி போர் நடைபெற்ற போது விட்டு சென்ற ஆங்கிலேயர்கள் பீரங்கி ஒன்று, ராயக்கோட்டை அடுத்த எதிர்கோட்டையில், 1985ம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டு, அப்போதய டிஐஜி தேவாரம் தலைமையில், ராயக்கோட்டை காவல் நிலையத்தின் முன்பாக காட்சிப்பொருளாக வைக்கப் பட்டது.வெளியூாிலிருந்து அந்த சாலைவழியாக கார், பஸ் போன்ற வாகனங்களில் செல்வோர் இன்றும் பீரங்கியை ஆர்வத்துடன் பார்த்துச்செல்கின்றனர். இன்றளவும் கம்பீரமாக காட்சியளிக்கும் பீரங்கி, திப்பு சுல்தானுக்கு எதிராக ஆங்கிலேயர் நடத்திய போர் உள்ளிட்ட, பல வரலாற்று  தகவல்களை தன்னுள் புதைத்துள்ளது.


Tags : Rayakkotta Police station , The cannon placed in front of Rayakottai Police Station, Krishnagi District, Rayakottai is still majestic today.
× RELATED காங்கிரஸ் நிர்வாகி படுகொலை சிபிஐ...