×

கடல்சார்ந்த செயல்பாடுகளில் தமிழ்நாடு முன்னணி மாநிலம்: அமைச்சர் எ.வ.வேலு பேச்சு

சென்னை: சென்னை, பள்ளிக்கரணையில் உள்ள ஒன்றிய அரசின் தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தில் நேற்று காலை தமிழ்நாட்டின் கடல்சார் பகுதிகளை பயன்படுத்த திட்டமிடுதல் குறித்த பயிலரங்கத்தை, பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார். தேசிய கடலோர ஆராய்ச்சி மையம் இயக்குநர் ரமணமூர்த்தி, ஒன்றிய புவி அறிவியல் அமைச்சக இணை செயலாளர் செந்தில் பாண்டியன், ஸ்ருஷ்டி இயற்கை பாதுகாப்பு அமைப்பு இயக்குநர் தீபக் ஆப்தே, அரசு செயலாளர் சுப்ரியா சாஹூ, நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா ஆகியோர் பங்கேற்றனர். பயிலரங்கத்தை தொடங்கி வைத்து பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: தமிழ்நாடு 1,076 கி.மீ. நீளம் கொண்ட இரண்டாவது மிக நீண்ட கடற்கரையைக் கொண்டுள்ளது மற்றும் இந்தியாவின் மொத்த கடற்கரையில் 13 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. சோழர்கள் காலத்திலிருந்தே, தமிழ்நாடு கடல்சார்ந்த செயல்பாடுகளில் முன்னணி மாநிலமாக இருந்து வருகிறது.

யுனெஸ்கோ (UNESCO) நிறுவனத்தால் கருத்துருவாக்கப்பட்ட “கடல்சார் பகுதிகளை திட்டமிடுதல்“ குறித்த புதிய கருத்துகளை ஈர்க்கும் வகையில், ‘நமது ஆற்றல்மிக்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலுடன், இந்த முக்கியத்துவம் வாய்ந்த பயிலரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. துறைமுகங்கள், மீன்பிடி பகுதிகள், சதுப்பு நிலங்கள், மணற்குன்றுகள், சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் போன்றவை உள்ளடக்கிய தமிழ்நாட்டின் வளமிகுந்த கடலோரப் பகுதியினை சிறப்பாக நிர்வகிப்பதற்கு பலதரப்பட்ட பங்குதாரர்கள், பல்துறை நிபுணர்களின் ஒருமித்த கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் தேவைப்படுகிறது.

கடல்சார்ந்த இடங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், இந்த பயன்பாடு நிலைத்த மற்றும் பொறுப்புமிக்கதாக இருக்க வேண்டியதை உறுதி செய்வவதற்கான உரிய வரைமுறைகள் அவசியமாகிறது. தமிழ்நாடு மாநிலத்திற்கான கடல்சார் பகுதிகளை பயன்படுத்த திட்டமிடுதல் குறித்த இந்த பயிலரங்கம், சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் நலனுக்காக மற்ற கடலோர மாநிலங்களுக்கு தங்கள் கடல் இடத்தை சிறந்த மற்றும் நிலையான மேலாண்மைக்கு ஒரு முன்னோடியாக விளங்கும். இவ்வாறு அவர் பேசினார்.



Tags : Tamil Nadu ,Minister ,AV ,Velu , Tamil Nadu is a leading state in maritime activities: Minister AV Velu's speech
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...