×

ஐகோர்ட் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த ஆணை ரத்து யூடியூபர் மாரிதாஸ் மீதான வழக்கை விசாரிக்க தடையில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: மறைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் தமிழகத்திற்கு எதிராக கருத்து தெரிவித்த விவகாரத்தில் மாரிதாஸ் மீதான வழக்கை தமிழக காவல்துறை விசாரிக்க தடையில்லை என உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கிய முந்தைய ஆணையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. யூடியூபர் மாரிதாஸ் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி தனது டிவிட்டர் பக்கத்தில் மறைந்த முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் மரணத்தையொட்டி, தமிழ்நாடு காஷ்மீராக மாறி வருவதாக பதிவிட்டிருந்தார்.

இது தொடர்பாக பாலகிருஷ்ணன் என்பவர் மதுரை மாநகரக் காவல் துறையில் புகார் அளித்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டு தேனி மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டார். இதனை எதிர்த்து, மாரிதாஸ் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், மாரிதாஸ் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து 2021 டிசம்பர் 14ல் உத்தரவிட்டார். உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து அதனை பரிசீலனை செய்த உச்ச நீதிமன்றம், இதுகுறித்து பதிலளிக்க மாரிதாசுக்கு கடந்த டிசம்பர் 2ம் தேதி நோட்டீஸ் பிறப்பித்திருந்தது.

இதையடுத்து மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் சி.டி.ரவிக்குமார் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் சஞ்சய் ஹெக்டே மற்றும் ஜோசப் அரிஸ்டாட்டில் ஆகியோர் வாதத்தில், ‘‘இந்த  வழக்கு தொடர்பான புலன்விசாரணைக்கு தமிழக காவல்துறைக்கு உரிய கால அவகாசம் வழங்காமல் மாரிதாஸ் மீதான கிரிமினல் வழக்கு நான்கு நாட்களில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது உச்ச நீதிமன்றம் முன்னதாக வழங்கிய உத்தரவுகளுக்கு எதிரானது என்பதால், இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’’ என தெரிவித்தனர்.

இதையடுத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், ‘‘இந்த விவகாரத்தில் தமிழக அரசு தரப்பின் வாதங்கள் மற்றும் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்கிறது. பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தது தொடர்பாக அவதூறு பரப்பியதாக கடந்த 09-12-2021ல் மாரிதாஸ் மீது வழக்கு பதியப்பட்ட நிலையில், அந்த வழக்கை ரத்து செய்ய மாரிதாஸ் 10-12-2021ல் மனு தாக்கல் செய்துள்ளார். அதனை அவசரமாக விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை 14-12-2021 அன்று மாரிதாஸ் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்துள்ளது. மேலும் மாரிதாஸ் மீது பதியப்பட்ட வழக்கு தொடர்பாக புலன் விசாரணையை நடத்த தமிழக காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உரிய கால அவகாசம் கொடுக்கவில்லை. மேலும் அந்த வழக்கை அவசரமாக நான்கு நாட்களில் ரத்து செய்துள்ளதை ஏற்க முடியாது. எனவே சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த செயல் அதிருப்தி அளிக்கிறது.

அதனால் வழக்கின் தன்மையை அடிப்படையாகக் கொண்டு உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மேலும் மாரிதாஸ் மீதான வழக்கை விசாரிக்கவும் எந்தவித தடையும் கிடையாது’’ என உத்தரவிட்ட நீதிபதிகள், தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர். உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் மாரிதாஸ் மீதான வழக்கு தமிழக காவல்துறை விரைவில் மீண்டும் விசாரிக்க துவங்கும் என தெரியவருகிறது.

* மாரிதாஸ் மீது பதியப்பட்ட வழக்கில் புலன் விசாரணையை நடத்த  காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உரிய கால அவகாசம் தரவில்லை.
* வழக்கை அவசரமாக  நான்கு நாட்களில் விசாரித்து ரத்து செய்துள்ளதை ஏற்க முடியாது.
* சென்னை  உயர்நீதிமன்றத்தின் இந்த செயல் அதிருப்தி அளிக்கிறது.



Tags : ICourt ,Judge ,GR Swaminathan ,YouTuber ,Maridas ,Supreme Court , The Supreme Court's order to set aside the order passed by Judge G.R. Swaminathan does not bar the hearing of the case against YouTuber Maridas: Supreme Court
× RELATED வேட்புமனு நிராகரிப்பு வழக்கு: ஐகோர்ட் மறுப்பு