×

தமிழ்நாடு கனிம நிறுவனத்திற்கும், ஐ.ஆர்.இ.எல் (இந்தியா) நிறுவனத்திற்கும் இடையே முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கடற்கரையோர கனிமவளத்தை வணிக ரீதியில் பிரித்தெடுத்து சந்தைப்படுத்த தமிழ்நாடு கனிம நிறுவனமும்,ஐ.ஆர்.இ.எல்  நிறுவனமும் இணைந்து ஓர் புதிய நிறுவனம் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  முன்னிலையில் இன்று (9.1.2023) தலைமைச் செயலகத்தில், கடற்கரையோர கனிமவளத்தை வணிக ரீதியில் பிரித்தெடுத்து சந்தைப்படுத்த தமிழ்நாடு கனிம நிறுவனமும், ஐ.ஆர்.இ.எல் (இந்தியா) நிறுவனமும் இணைந்து ஓர் புதிய நிறுவனம் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

தமிழகத்தில் கிடைக்கக்கூடிய கனிம வளங்களை விஞ்ஞானரீதியாக சுற்றுச்சூழல் மாசுபடாத வண்ணம், சுரங்கப்பணி மேற்கொண்டு, அதன் மூலம் பல்வேறு உபதொழில்கள் தொடங்கி தொழில்வளத்தை பெருக்கவும், கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கிட வேண்டும் என்பது தமிழ்நாடு முதலமைச்சர் தொலைநோக்கு பார்வையாகும்.

கடற்கரையோர கனிமங்களின் சுரங்க அனுமதி, அரசு நிறுவனங்களுக்கோ, அரசிற்கு சொந்தமான அல்லது அரசால் கட்டுப்படுத்தப்படுகிற நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்று அணுசக்தி கனிம அனுமதி விதியின்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் ஐ.ஆர்.இ.எல் (இந்தியா) நிறுவனமும், தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு கனிம நிறுவனமும் இணைந்து, தமிழகத்தின் தென் மாவட்டங்களின் கடற்கரையோர கனிம வளங்களை குறிப்பாக, கார்னட் (Garnet), இலுமினைட் (IImenite), ஜிர்கான் (Zircon), ரூட்டைல் (Rutile) போன்ற கனிமங்களை பிரித்தெடுத்து சந்தைப்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் தமிழ்நாடு கனிம நிறுவனமும், ஐ.ஆர்.இ.எல் (இந்தியா) நிறுவனமும் இணைந்து ஓர் புதிய நிறுவனம் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், கடலோர கனிமங்களை பிரித்தெடுக்கவும், அதனை மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மேம்படுத்தவும், அதன்மூலம் அணுசக்தி துறைக்கு தேவையான முக்கியமான கனிமங்கள் கிடைக்க செய்வதுடன் பிற தொழில்களுக்கு இதர கனிமங்கள் கிடைக்கப்பெற வாய்ப்பும் உண்டாகும்.

இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கண்டறியப்பட்டுள்ள தேரி மணல் இருப்பு சுமார் 52 மில்லியன் டன்னாகும். இதனைக் கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் குதிரைமொழி மற்றும் சாத்தான்குளம் ஆகிய இடங்களில் கனிமங்களை பிரித்தெடுக்கும் இரண்டு தொழிற்சாலைகள் தலா 1500 கோடி ரூபாய் முதலீட்டில் நிறுவி ஆண்டிற்கு ஒவ்வொரு தொழிற்சாலையிலிருந்தும் 1075 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் இப்பகுதிகளில் சிறப்பான பொருளாதார வளர்ச்சி ஏற்படுவதுடன், நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 4000 பேருக்கு வேலைவாய்ப்பு உண்டாகும். இந்நிகழ்வின்போது, நீர்வளம், சுரங்கம் மற்றும் கனிமங்கள் துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் .ச. கிருஷ்ணன் ஒன்றிய அரசின் அணுசக்தி துறை தலைவர் மற்றும் செயலாளர் கே.என். வியாஷ், தமிழ்நாடு கனிம நிறுவன மேலாண்மை இயக்குநர் சுதீப் ஜெயின், ஐ.ஆர்.இ.எல் (இந்தியா) நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டி.சிங் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.



Tags : Tamil Nadu Mineral Institute ,LL ,India , Memorandum of Understanding between Tamil Nadu Mineral Corporation and IREL (India) in the presence of Chief Minister
× RELATED இந்தியா கூட்டணி தலைவர்கள் ஜூன் 1-ம் தேதி ஆலோசனை