பாஜ ஆளும் மாநிலத்திலும் நடை பயணத்திற்கு ஆதரவு: அரியானாவில் ராகுல் பேட்டி

கர்னல்: பாஜ ஆளும் மாநிலங்களிலும் இந்திய ஒற்றுமை நடைபயணத்திற்கு அமோக ஆதரவு கிடைப்பதாக ராகுல் காந்தி கூறி உள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடை பயணம் பல்வேறு மாநிலங்களை கடந்து, அரியானாவில் கடந்த வியாழக்கிழமை நுழைந்தது. அங்கு, குருஷேத்ரா நகரில் கடும் குளிருக்கு மத்தியில் நேற்று காலை 6 மணிக்கு யாத்திரை தொடங்கியது. அப்போது வெறும் டிசர்ட் அணிந்தபடி குளிரில் நடந்து வந்த ராகுலை உற்சாகப்படுத்த இளைஞர்கள் பலரும் தங்களின் சட்டையை கழற்றி ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்தனர்.

பின்னர் ராகுல் அளித்த பேட்டியில், ‘‘இந்திய ஒற்றுமை நடை பயணத்திற்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. முதலில் தமிழ்நாடு, கேரளாவில் கிடைத்த ஆதரவு கர்நாடகாவில் கிடைக்காது என்றார்கள். பாஜ ஆளும் கர்நாடகாவிலும் எங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பின்னர் தென் மாநிலங்களைப் போல வடமாநிலங்களில் ஆதரவு கிடைக்காது என்றார்கள். ஆனால் தென் மாநிலத்தை விட வட மாநிலத்தில் அமோக ஆதரவு கிடைத்தது.

இந்தி பேசும் மாநிலங்களில் யாத்திரை எடுபடாது என்றார்கள். மத்திய பிரதேசத்தில் நுழைந்த போது இன்னும் நல்ல ஆதரவு கிடைத்தது. பாஜ ஆளும் அரியானாவுக்கு வந்துள்ளேன். இங்கும் இளைஞர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த பயணம் வெறுப்பு, அச்சத்தை பரப்புவோருக்கும், பணவீக்கம், வேலையின்மைக்கும் எதிரான பயணம்’’ என்றார்.

Related Stories: