சென்னை: திரு.வி.க.நகர் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து மேயர் பிரியா நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு ெசய்தார். சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலத்தில் மேயர் மேம்பாட்டு நிதியின் கீழ், வார்டு-71க்குட்பட்ட மங்களாபுரம் பகுதியில் பழுதடைந்த பேருந்து நிழற்குடையினை மாற்றி ரூ.16.61 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிழற்குடை அமைப்பது குறித்தும், வார்டு-74க்குட்பட்ட வாழைமா நகரில் ரூ.80லட்சம் மதிப்பீட்டில் இறகுப்பந்து மைதானம் அமைப்பது குறித்தும் மேயர் பிரியா நேற்று நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
மேலும் வாழைமா நகரில் உள்ள அங்கன்வாடி மையத்தின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார். அதை தொடர்ந்து, கவுன்சிலர் மேம்பாட்டு நிதியின் கீழ் வார்டு-74, கிருஷ்ணாதாஸ் சாலையில் உள்ள சென்னை தொடக்கப்பள்ளியில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் புதிததாக அங்கன்வாடி மையம் அமைப்பது குறித்தும் ஆய்வு செய்தார்.
பின்னர், சிட்டிடீஸ் திட்டத்தின் கீழ் வார்டு-73க்குட்பட்ட குக்ஸ் சாலையில் உள்ள சென்னை உயர்நிலைப்பள்ளியில் ரூ.5.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பள்ளிக் கட்டடப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையடுத்து, வார்டு-74க்குட்பட்ட பெரம்பூர் மேம்பாலத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் அழகுப்படுத்தும் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது, திரு.வி.க.நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, மண்டலக்குழுத் தலைவர் சரிதா மகேஷ்குமார், தலைமைப் பொறியாளர் (பொது) எஸ்.ராஜேந்திரன், மண்டல அலுவலர் முருகன் உட்பட பலர் உடனிருந்தனர்.