×

சென்னை விமானநிலையத்தில் போலி ஐஎஸ்ஐ முத்திரையுடன் 327 பொம்மைகள் பறிமுதல்

மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் உள்நாட்டு, சர்வதேச முனையங்களில் போலி ஐஎஸ்ஐ முத்திரையுடன் பயணிகளுக்கு விற்பனை செய்வதற்கு வைத்திருந்த 327 பொம்மைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சம்பந்தப்பட்ட கடைகளுக்கு சீல் வைத்து, உரிமையாளர்கள்மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். சென்னை விமானநிலையத்தில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு முனையங்களில் பயணிகளின் வருகை, புறப்பாடு பகுதிகளில் குழந்தைகள் விளையாடுவதற்கு தேவையான பொம்மைகள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளன. சர்வதேச முனையத்தில், தரம் வாய்ந்த ஐஎஸ்ஐ முத்திரை பதித்த பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும் என்ற விதி உள்ளது.

எனினும், சென்னை சர்வதேச விமான முனையத்தில் கடந்த சில ஆண்டுகளாக போலி ஐஎஸ்ஐ முத்திரைகளுடன் தரமற்ற பொம்மைகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக ஏராளமான புகார்கள் வந்தன. இந்நிலையில், சென்னை உள்நாட்டு விமான முனையத்தில் உள்ள பொம்மை கடைகளில் நேற்றிரவு இந்திய தர நிர்ணய அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அக்கடைகளில், போலி ஐஎஸ்ஐ முத்திரையுடன் அல்லது முத்திரை இல்லாத போலி பொம்மைகள் அதிகளவில் விற்பனைக்கு வைத்திருப்பது அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அக்கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த போலி ஐஎஸ்ஐ முத்திரை கொண்ட 327 பொம்மைகளை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

இதைத் தொடர்ந்து, அந்த கடைகளுக்கு சீல் வைத்து, சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்கள்மீது இந்திய தர நிர்ணய அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். சென்னை விமானநிலையம் உள்பட பல்வேறு நகர் பகுதிகளில் இதுபோன்ற போலி பொம்மைகள் விற்பனை செய்வதாக தெரியவந்தால், உடனடியாக, 9486873051 என்ற எண்ணுக்கோ, பிஐஎஸ் இணையதளத்திலோ பொதுமக்கள் புகார் அளிக்கலாம். சம்பந்தப்பட்ட நபர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய தர நிர்ணய அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

Tags : Chennai airport , 327 toys with fake ISI stamp seized at Chennai airport
× RELATED அதிக பயணிகளை கையாண்டதில் சென்னை விமான நிலையம் 3வது இடம்..!!