×

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா உடல்நலக்குறைவால் காலமானார் .

ஈரோடு: ஈவிகேஎஸ் இளங்கோவனின் மூத்த மகனும், ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவுமான திருமகன் ஈவெரா இன்று மதியம் மாரடைப்பால் காலமானார். அவரது மரணம் தமிழக அரசியலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மூத்த மகன் திருமகன் ஈவெரா(46). இவர் தற்போது தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்து வருகிறார். கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு திருமகன் ஈவெரா வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருந்து வந்தார். திருமகன் ஈரோட்டிலேயே தங்கியிருந்து தொகுதி பணிகளை கவனித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த ஒரு வாரகாலமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இது குறித்து தகவல் தெரிந்ததும், அவரது தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் ஈரோடு புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில் இன்று காலை முதல் திருமகனின் உடல்நிலை மேலும் மோசமடைந்த நிலையில், மதியம் சுமார் 12.45 மணியளவில் சிகிச்சை பலனின்றி எம்எல்ஏ திருமகன் ஈவெரா காலமானார்.

இதையடுத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ஈரோடு கச்சேரி சாலையில் உள்ள இல்லத்தில் திருமகன் ஈவெரா உடல் வைக்கப்பட உள்ளது.
இறந்த எம்எல்ஏ திருமகன் ஈவெரா, பி.ஏ. பொருளாதாரம் படித்துள்ளார். இவருக்கு சமனா ஈவெரா என்ற மகள் உள்ளார். கடந்த 2000ம் ஆண்டு முதல் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக இருந்து வந்தார். 2006-2010ம் ஆண்டு வரை இளைஞர் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளராகவும், 2014-2017 வரை தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக வலைதள பிரிவு தலைவராகவும் இருந்தார்.

எம்எல்ஏ திருமகன் ஈவெரா இறந்த தகவல் காங்கிரஸ் கட்சியினரிடையே மட்டுமல்லாது பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மரணம் தமிழக அரசியலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



Tags : Erode East Block ,MLA ,Thirumakan Ivera , Erode, Thirumagan, EVKS Ilangovan, MLA
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...