×

சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து பணியில் சேர்க்க கோரி ஐ.பி.எஸ். அதிகாரி ராஜேஷ் தாஸ் தொடர்ந்த வழக்கை 3 மாதத்தில் முடிக்க தீர்ப்பாயத்துக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்து ஐ.பி.எஸ். அதிகாரிராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த வழக்கை மூன்று மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று மத்திய நிர்வாக தீர்ப்பாயத்துக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.  பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அப்போதைய சிறப்பு டி.ஜி.பி.க்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் குறித்து விசாரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் விசாகா குழு அமைக்கப்பட்டது. அதேபோல குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

 இந்நிலையில், 2021ம் ஆண்டு மார்ச் மாதம் ராஜேஷ் தாஸ் சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன் பிறகு இரு முறை சஸ்பெண்ட் உத்தரவு நீட்டிக்கப்பட்டது.  இதை ரத்து செய்து, தன்னை மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிடக் கோரி ராஜேஷ் தாஸ், மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

 இந்த வழக்கை விரைந்து முடிக்கும்படி உத்தரவிடக் கோரி ராஜேஷ் தாஸ் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில், எந்த காரணமும் இல்லாமல் தனது சஸ்பெண்ட் உத்தரவு நீட்டிக்கப்பட்டு வருகிறது என்று கூறியிருந்தார்.  இந்த மனு நீதிபதிகள் வேலுமணி மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த வழக்கை மூன்று மாதங்களில் மத்திய நிர்வாக தீர்ப்பாயம் முடிக்க வேண்டும். ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனுவுக்கு இரு வாரங்களில் ஒன்றிய அரசு பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Tags : IPS ,Court ,Rajesh Das , Suspension order, I.P.S. high Court order to Officer Rajesh Das, Tribunal
× RELATED பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த...